Hindi Imposition: இனி இந்தியில்தான் இமெயில்!? மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய முடிவா? வெடிக்கும் சர்ச்சை!
மத்திய அரசு இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மத்திய அரசு இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக சில மாநிலங்கள் அதிக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை பயன்படுத்தவேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் அடுத்த ஒரு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இனிமேல் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அலுவல் சார்பாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் இனிமேல் இந்தி மொழியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Home Ministry has ordered that all official e-mail letters and communications should now be in Hindi only.
— Raja Shanmugasundaram (@SRajaJourno) April 16, 2022
- Sources
இந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டிருந்த மாநிலங்களுக்கு இது புது சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 346-ன்படி இரு மாநிலங்களுக்கு இடையே அல்லது ஒரு மாநிலம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றிற்கு இடையே அலுவல் மொழியாக ஒப்புக் கொண்ட மொழி இருக்கலாம் என்று உள்ளது. அதாவது அந்த மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆங்கிலத்தில் அலுவல்களை மேற்கொள்ளும் பட்சத்தில் அதுவே அலுவல் மொழியாக இருக்கும். அதேசமயத்தில் அந்த மாநிலங்கள் இந்தியை அலுவல் பயன்பாட்டிற்கு ஒப்புக் கொள்ளும் போது இந்தி அலுவல் மொழியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு இந்தியில் அலுவல்களை மேற்கொண்டால் அது இந்தி பேசாத மாநிலங்களுக்கு சிக்கலாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தப் புதிய முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனினும் இது தொடர்பான அதிகார்ப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்