Ideas of India: இந்தியாவில் முஸ்லீம்கள் செழிப்பாக வாழ்கின்றனர் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால்
பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ள நிலையில், முஸ்லீம் மக்கள் இங்கு நன்றாக வாழ்கிறார்கள், செழித்து வருகிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பேசியுள்ளார்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் கிருஷ்ண கோபால் பாகிஸ்தான் குறித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் பாகிஸ்தான் தனது வழிமுறைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இந்தியாவை பாகிஸ்தான் நான்கு முறை தாக்கியுள்ளது, அதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கிடையேயான உறவை சீராக்க வேண்டும் என்றும், இந்தியா மீதான பகைமையை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பகையால் உருவானது பாகிஸ்தான்
பாகிஸ்தான் பகைமையின் அடிப்படையில் நிறுவப்பட்டது என்று கூறிய அவர், "பாகிஸ்தான் விரோதத்தின் அடிப்படையில் உருவானது. 'நாம் இந்தியாவுடன் இருக்க முடியாது' என்ற ஜின்னா மற்றும் இக்பால் ஆகியோரின் கருத்துதான் பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது. இங்கு இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள், அது தவறான கொள்கை. ஆனால், பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ள நிலையில், முஸ்லீம் மக்கள் இங்கு நன்றாக வாழ்கிறார்கள், செழித்து வருகிறார்கள்," என்று பேசினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மேலும் பேசிய கிருஷ்ண கோபால், "மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமானது. இது நாட்டின் நிலையை அறிவிக்கிறது. மக்கள்தொகையில் ஆபத்தான மாற்றத்தை இது காட்டலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை அரசியல் ரீதியானது, அனைத்து துறைகளும் வளர வேண்டும். சமூகத்தில் சாதிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த முயற்சிகளையும் நாங்கள் விரும்பவில்லை. சாதி அடையாளங்களை எந்த நடவடிக்கையாலும் உறுதிபடுத்தக் கூடாது", என்றார்.
அதானி விவகாரம் குறித்து
ஒரே மாதிரியான சிவில் கோட் அரசியலமைப்பு கட்டமைப்பின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், உச்ச நீதிமன்றம் பல முறை UCC க்கு தயாராகுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதானி விவகாரம் குறித்து கேட்டபோது ஆர்எஸ்எஸ் தலைவர் கிருஷ்ண கோபால், "நாடாளுமன்றம் விவாதித்தது, வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. அன்றாடப் பிரச்சனைகளில் சங்கம் பொதுவாக கருத்து தெரிவிப்பதில்லை" என்று கூறினார். குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும், குழந்தை திருமணத்தை அஸ்ஸாம் அரசு ஒடுக்குவது குறித்து கேட்டபோது, கிருஷ்ண கோபால், "சட்டவிரோத செயல்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் தாங்கள் குறிவைக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். குழந்தை திருமணம் என்பது ஒரு சமூகத்திற்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல." என்று கூறினார்.