புதிய இந்தியாவை கட்டமைக்கும் முயற்சி...உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏபிபி நெட்வொர்க்கின் மாநாடு
வரும் 2047ஆம் ஆண்டு, இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள சூழலில், அதற்கான விதையை விதைக்கும் விதமாக புதிய இந்தியாவை கட்டமைக்கும் பெரும் முயற்சியில் ஏபிபி குழுமம் ஈடுபட்டுள்ளது.
குரலற்றவர்களின் குரலாக ஏபிபி:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்று ஏபிபி. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம் குரலற்றவர்களின் குரலாக இருப்பது வேண்டும். அந்த வகையில், கடந்த 101 ஆண்டுகளாக மக்களின் குரலாக சமரசமற்ற முறையில் இயங்கி வருகிறது ஏபிபி ஊடகம்.
"இதழியலின் ஒரே நோக்கம் சேவை" என்கிறார் அண்ணல் காந்தி அடிகள். அவரின் பொன் மொழிக்கு ஏற்ப தொடர்ந்து செயல்பட்டு வருகிறது ஏபிபி. அரசை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய நேரத்தில் கேள்வி எழுப்பியும் துணை நிற்க வேண்டிய நேரத்தில் துணை நின்றும் ஊடக சேவையை தொடர்ந்து வருகிறது.
புதிய இந்தியாவை கட்டமைக்கும் ஒரு முயற்சி:
வரும் 2047ஆம் ஆண்டு, இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள சூழலில், அதற்கான விதையை விதைக்கும் விதமாக புதிய இந்தியாவை கட்டமைக்கும் பெரும் முயற்சியில் ஏபிபி குழுமம் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஐடியாஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் ஒரு மாபெரும் மாநாட்டை கடந்தாண்டு முதல் நடத்தி வருகிறது.
ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது பதிப்பு நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வின் கருப்பொருளாக "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பு எடுத்து கொள்ளப்பட்டது.
இரண்டு நாள்களில் மொத்தம் 40 அமர்வுகள் நடத்தப்பட்டு அதில், சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என மொத்தம் 60 பேர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
தலைவர்கள் அலங்கரித்த ஏபிபி மாநாடு:
முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல் ஆகியோர் ஏபிபி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ் மற்றும் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.
கொந்தளிப்புக்கு மத்தியில் உலக நாடுகள்:
உலகம் கொந்தளிப்பான சூழலை எதிர்கொண்டு வருகிறது. சமூகத்தை தொழில்நுட்பம் ஜனநாயகப்படுத்துவதைத் தொடர்ந்து விஞ்ஞானம் பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. பனிப்போரின் தொடர்ச்சியாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் சூழலில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த சீனா இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரானில் அடக்குமுறையை எதிர்த்து துணிச்சல் மிகு பெண்கள் போராடுவதற்கான தங்கள் உறுதியை வெளிப்படுத்தி வருகிறார்கள். வட அமெரிக்காவில், சமூக பழமைவாத சக்திகள் தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்தி வருகின்றன. தெற்காசியாவில் பொருளாதார ஸ்திரமின்மை எதிர்பார்ப்புகளைத் தடம்புரளச் செய்து, ஆளும் சக்திகளை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது.
வேலையின்மை பிரச்னை, அதிகரிக்கும் விலைவாசி உயர்வு தொடர் கிளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாடு கடந்து எல்லை கடந்து சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளனர் அகதிகள். இந்த குழப்பத்தின் மையமாக உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றம், பழைய கூட்டணிகள் உடைந்து புது கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள சூழ்நிலையில், அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தென்னிந்தியா, வட இந்தியாவுக்கு இடையேயான பிரச்னைகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகார போட்டி, நீதித்துறை இந்திய அரசுக்கிடையேயான அதிகார போட்டி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூழலில்தான், ஏபிபி நெட்வொர்க்கின் மாநாடு நடத்தப்பட்டது.
எதிர்காலத்தின் நம்பிக்கை இந்தியா: பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்
ஏபிபி நெட்வொர்க்கின் மாநாட்டில் முதல் ஆளாக பேசிய பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ், பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்தார். தற்போது, உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய லிஸ் டிரஸ், "மேற்குலகில் நாம் மனநிறைவு அடைந்தோம். சுதந்திரத்தை பாராட்ட தவறவிட்டோம்.
நாம் முன்னரே செயல்பட்டிருக்க வேண்டும். உக்ரைன் அவர்கள் கேட்டபோது நேட்டோவுடன் சேர அனுமதித்திருக்க வேண்டும். எண்ணெய், எரிவாயு மற்றும் தன்னலமாக செயல்பட்டு வரும் ரஷிய ஆட்சியாளர்கள் ஐரோப்பாவிற்கு தரும் நிதி ஆகியவற்றிற்காக நாம் ரஷ்யாவைச் சார்ந்திருக்க கூடாது என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்" என கூறினார்.
இந்தியா குறித்து பேசிய லிஸ் டிரஸ், "இந்தியாவில், நமது எதிர்காலத்திற்கான மிகப்பெரிய நம்பிக்கையை நாம் காண்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் சுதந்திர ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது" என்றார்.
மாநாட்டில் அனைவரையும் வியக்கவைத்த மத்திய அமைச்சர்:
பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி மூலம் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசி மாநாட்டில் உள்ள அனைவரையும் வியக்கவைத்தார் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
"ரயில்வேயுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்ட பிரதமர் மோடி, முழு நகரத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வந்தே பாரத் பற்றிய கட்டுரைகள் 18 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், இந்தியா இன்னும் மூன்று ஆண்டுகளில் உலகின் முக்கிய ரயில் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக மாறும்" என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மாநாட்டில் ஹைட்ரஜனின் முக்கியத்துவம் குறித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "ஹைட்ரஜன்தான் நமது எதிர்கால எரிபொருள். இந்தியாவின் எதிர்கால வாகனங்கள் ஹைட்ரஜன் மற்றும் பசுமை எரிபொருளில் இயங்கும்.
2030 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மின்சார வாகனங்களின் இலக்குகளைப் பற்றி நான் ஒருபோதும் பேசவில்லை என்றாலும், வரும் ஆண்டுகளில், இந்தியா நிச்சயமாக மின்சார வாகனங்களுக்கு மாறும். ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் கோடி மதிப்புள்ள புதைபடிவ எரிபொருளை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். நமது விவசாயிகள் விரைவில் பசுமை எரிபொருளையும் பசுமை ஹைட்ரஜனையும் உற்பத்தி செய்வார்கள்" என்றார்.
ஏபிபி மாநாட்டில் டெல்லி துணை முதலமைச்சர் கைதை கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்:
மாநாட்டின் முதல் நாளன்று பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "சிசோடியா ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்படுவார்.
கல்வியில் ஒரு புரட்சி மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று சிசோடியா நம்பிக்கை தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவரை பொய் வழக்கில் சிக்க வைத்து, அவப்பெயரை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது" என்றார்.