Exclusive | மனைவியைப் பகிர்ந்துகொள்ளும் அதிர்ச்சி கலாச்சாரம்.. உளவியல் நிபுணர் சொல்லும் பின்னணிக் காரணங்கள்!
சம்பந்தப்பட்டவர்கள் முதலில் சமூக வலைதளங்களில் பேசி, பிறகு வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் முகவரிகளைப் பகிர்கின்றனர். பின்னர் வீடுகளிலோ, விடுதிகளிலோ மனைவியையே பரிமாறிக் கொண்டுள்ளனர்.
கேரளாவில் அண்மையில் மனைவியை மாற்றி பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் கும்பல் ஒன்று பிடிபட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காகவும் விநோத மனநிலையாலும் இத்தகைய கொடூர சம்பவங்கள் அரங்கேறி உள்ளனவா என்று கேள்வி எழுந்துள்ளது.
கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த மணமான பெண் ஒருவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோட்டயம் அடுத்த கருகச்சல் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனது கணவன் பிற ஆண்களுடன் மாற்றி மாற்றி உறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் இதற்காக சம்பந்தப்பட்ட ஆண்களிடம் பணம் பெறுவதாகவும் உணர்வுபூர்வமாக மிரட்டி வருவதாகவும் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின.
அதிரவைத்த கப்பிள் ஷேரிங்!
விசாரணையில் வைஃப் ஸ்வாப்பிங் (Wife Swapping) என்ற பெயரிலும் கப்பிள் ஷேரிங் (Couple Sharing) என்ற பேரிலும் இதற்கான குழுக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதலில் சமூக வலைதளங்களில் பேசி, பிறகு வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் முகவரிகளைப் பகிர்கின்றனர். பின்னர் வீடுகளிலோ, விடுதிகளிலோ மனைவியையே பரிமாறிக் கொண்டுள்ளனர். ஒரே பெண் மூன்று ஆண்களிடம் பாலியல் உறவுகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நெட்வொர்க்கில் சமூகத்தில் உயரிய பதவியில் உள்ள ஆண்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். மணமாகாத ஆண்களும் இந்தக் குழுவில் இணைந்து, செயல்பட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் பொறுக்க முடியாத சங்கனாச்சேரி பெண், 2 முறை வீட்டை விட்டு (புகார் அளிப்பதற்கு முன்பு) வெளியேறியுள்ளார். எனினும் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பது போன்ற புகைப்படங்களை அனுப்பிய அவரின் கணவர், மீண்டும் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்து வந்துள்ளார். மீண்டும் கணவரே தன்னைப் பிற ஆண்களுடன் பகிர்வது தொடர்ந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண், தன்னுடைய சகோதரருடன் இணைந்து கருகச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 பேர் கைது
இதையடுத்து பெண்ணின் கணவர், ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். ஒருவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பி ஓடிய நிலையில், அவரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் மொபைல், சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வுசெய்த போலீஸார், இந்தக் கும்பலில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் கணவன், சொந்த மனைவியையே 4 பேருக்குப் பகிர்ந்து அளிக்க என்ன காரணம், அதற்குப் பின்னால் உள்ள மனநிலை, ஆதிகாலம் தொட்டே இருந்த ஆண் - பெண் உறவு குறித்து விரிவாகப் பேசுகிறார் உளவியல் மருத்துவர் அசோகன்.
மனிதர்கள் தோன்றிய காலத்தில், பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் ஒரே ஆண் பல பெண்களுடன் உறவு கொள்வதும் (Polygyny) ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததும் (Polyandry) இருந்தது. இது மறுக்க முடியாத உண்மை. அப்போது கலவிக்கென எந்த வரைமுறையும் வகுக்கப்படவில்லை.
முறை தவறிய உறவுகள்
பின்னாட்களில் அரசுரிமை போய்விடக் கூடாது என்பதற்காக முறை தவறிய உறவுகள் இருந்தன. பின்பு சீஸர் காலத்தில் உறவு பேதமில்லாமல் கலவி இருந்தது. திருமணமும் நடைபெற்றது.
பண்டைய காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறையாக மட்டுமே கலவி இருந்தது. அப்போது ஆண்கள் கலவியை ஆதிக்கப் பொருளாக வைத்துக் கொண்டனர். பிள்ளைப்பேறு சமயத்தில் கலவியே நடைபெறாமல் இருந்தது.
அப்போது பெண்கள் ஆல்ஃபா ஆண்கள் எனப்படும் சமூகத்தில் சிறப்பான, திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் மட்டுமே உறவில் இருந்தனர். இதனால், நிறைய ஆண்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவனுக்கு ஒருத்தி (Monogamy) என்ற கலாச்சாரம் வந்தது. குடும்பம் என்ற அமைப்பு தோன்றியது. குடும்பத்துக்குள் பாசம், நேசம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான நெருக்கம் ஏற்பட்டது.
காலத்துக்கு ஏற்றவாறு காதலுக்கும் கலவிக்குமான வரையறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர், சிலரிடையே Polyamory என்றொரு புதிய உறவுமுறை வந்தது. இதன்படி, ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியாக முறையே வேறு சில பெண்கள், ஆண்களுடன் தொடர்பில் இருப்பர். இந்தத் தொடர்பு சம்பந்தப்பட்ட இருவருக்குமே தெரிந்திருக்கும்.
ரகசிய உறவுகள்
பொதுவாக எந்தவோர் உறவிலும் திருமணத்தைத் தாண்டி, சமூகத்தில் ஏற்றுக்கொள்ளாத உறவுகள் உண்டு. அவை ரகசியமாக, சற்றே குற்ற உணர்ச்சியுடன் தொடர்பில் இருக்கும். இதில் பின்னாட்களில் கொலை, மிரட்டல் உள்ளிட்ட நிறையக் குற்றங்கள் நடைபெறும். ரகசியமாக, யாருக்குமே தெரியாமல் அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தெரிந்த வகையில் இந்த உறவுகள் இருக்கும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விழாக்களில் மனைவிகளைப் பரிமாறும் வைஃப் ஸ்வாப்பிங் சம்பவங்கள் நடைபெறலாம். ஆனால் அது ரகசியமாகவே நடக்கும். ஆனால் வெளிப்படையாக நடந்துள்ள கேரள சம்பவத்தைப் பார்க்கும்போது வியாபார நோக்கில் நடைபெற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பணம்தான் அதன் அடிப்படையாக இருந்திருக்கும். அதேபோல மிரட்டி, ஏதேனும் காரியம் சாதிக்கவும் இவ்வாறு செய்திருக்கலாம். இதில் உணர்வுபூர்வமான உறவுகளுக்கு, ரகசியங்களுக்கு வாய்ப்பில்லை.
எதிர்பார்ப்பில்லாமல் நடக்காது
சம்பந்தப்பட்ட நபர், தனது மனைவியை நான்கு பேருக்கு வலுக்கட்டாயமாக பகிர்ந்து கொடுக்க முன்வருகிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர் அப்படிச் செய்யமாட்டார். தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்ட மாட்டார். இதில் பணம், மிரட்டல், வன்முறை உள்ளிட்டவையே பிரதானக் காரணங்களாக இருக்கும். இது மனைவியை மாற்றிக் கொள்ளும் வகைமையில் வராது.
சில நேரங்களில் ஒரு மணமான நபர் கலவியில் ஆர்வமில்லாதவராகவோ, முடியாதவராகவோ அல்லது மாறுபட்ட கலவியில் ஆர்வம் கொண்டவராகவோ இருக்கலாம். அதனால் விநோதமாக நடந்துகொள்ளலாம். ஆனால், இந்த சம்பவத்தில் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று உளவியல் மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.
விலங்கில் இருந்துதான் மனிதன் வந்தான், இதுதான் பரிணாம வளர்ச்சி. இன்று நாம் வாழும் வாழ்க்கை என்பது படிப்படியாகத் தகவமைத்துக் கொண்ட நாகரிக வாழ்க்கை. விலங்குகளிடம்கூட ஒருவரை இன்னொருவரிடம் உறவுகொள்ள வலியுறுத்தும், கட்டாயப்படுத்தும் காட்டுமிராண்டித்தனம் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.