ABP News-CVoter Opinion Poll: தமிழ்நாட்டில் எகிறி அடித்த INDIA கூட்டணி.. ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Lok Sabha Elections Opinion Poll 2024: மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ABP Cvoter Opinion Poll: அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், நமது ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மக்களவை தேர்தல்:
அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் INDIA கூட்டணி கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருக்கும் INDIA கூட்டணி மாநிலத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான INDIA கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி என மும்முனை போட்டி நிலவிகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
இவற்றை தவிர, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வரவிருக்கும் தேர்தலில் INDIA கூட்டணி 54.7 சதவிகித வாக்குகள் மேல் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக 27.8 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 10.5 சதவிகித வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள், 6.8 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற திமுக கூட்டணி முனைப்பு காட்டியது.
அந்த வகையில், கடந்த முறை இருந்த அதே கூட்டணியை இந்த முறையும் அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. கூடுதலாக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த முறை போன்றே, இந்த முறையும் அதே எண்ணிக்கையில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் திமுக கூட்டணி பலமாக இருக்கும் சூழலில், மறுபுறம் அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என தெளிவான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதிலும், பாஜகவுடன் அது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் ஜி. கே. வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளது. எந்த கூட்டணியில் பாமக இணையும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. margin of error is +/- 5%)