RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதிய சம்பவம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தேர்தல் நெருங்கும் சூழலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதிய சம்பவம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு விதமான தவறான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக கடிதத்தில் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்த மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் ஆதரவு கேட்டாரா கெஜ்ரிவால்?
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜகவின் தாய் அமைப்பாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், பல தவறான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாகவும் அதை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
"பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? தலித் மற்றும் பூர்வாஞ்சல் பகுதி வாக்காளர்களின் பெயர்கள் (வாக்காளர் பட்டியலில் இருந்து) பெரிய அளவில் நீக்கப்படுகின்றன.
தேசிய அரசியலில் பரபரப்பு:
இது, ஜனநாயகத்திற்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று RSS உணரவில்லையா?" என கெஜ்ரிவால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று கடந்த செப்டம்பர் மாதம், மோகன் பகவத்திற்கு மற்றுமொரு கடிதத்தை கெஜ்ரிவால் எழுதியிருந்தார். அதிலும், பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நினைக்கும் பாஜக, வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கிவருவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டும் அதே சமயத்தில், ஆளும் ஆம் ஆத்மி தனது ஆதரவை வலுப்படுத்துவதற்காக போலி வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிக்க: IND vs AUS: 19 வயசுதான்! சிட்னியில் ஆஸி.யை சட்னியாக்கிய இந்திய பாலகன் - யாருடா அந்த பையன்?