Watch Video: ஸ்ரீநகரில் குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம்.. ஏரியில் படகு சவாரி செய்த சோனியா காந்தி.. வைரலாகும் வீடியோ..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஸ்ரீநகரில் இருக்கும் நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று ஸ்ரீநகரில் நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார். மூன்று நாள் தனிப்பட்ட பயணமாக வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன், சோனியா காந்தி இணைந்து பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் ராகுல்காந்தி:
முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 19ஆம் தேதி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றார். கடந்த ஒரு வாரமாக, லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்முறையாக ராகுல் காந்தி, அங்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியலமைப்பு 370ஆவது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. லடாக்கை தொடர்ந்து அவர் காஷ்மீர் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
#WATCH | J&K: Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi arrives in Srinagar and takes a boat ride in Nigeen Lake
— ANI (@ANI) August 26, 2023
She will be meeting Congress MP Rahul Gandhi shortly pic.twitter.com/9jBEKG2ZB8
சோனியா காந்தி படகுசவாரி:
இந்நிலையில், நேற்று சோனியா காந்தி ஸ்ரீநகருக்கு சென்றார். அங்கு சென்ற பின், நைஜீன் ஏரியில் படகு சவாரி செய்தார். தனிப்பட்ட முறையில், குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி படகு சவாரி செய்த வீடியோ வெளியான நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பயணத்தில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வத்ரேவும் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வெள்ளிகிழமை லடாக் பிரதேசம் மற்றும் கார்கில் பகுதி மக்களை சந்தித்த பின் அவர் ஸ்ரீநகர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் விகார் ரசூல் வானி இது தொடர்பாக கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் அவருடைய வீடு. அவர் இங்குள்ள மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கிறார், எனவே அவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். இது அரசியல் பயணம் அல்ல, இது முற்றிலும் தனிப்பட்ட பயணம்” என தெரிவித்தார்.
நைஜீன் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் ராகுல் காந்தி தங்கியுள்ளார், மேலும் குடும்பத்தினர் ரெய்னாவாரி பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்க உள்ளனர். காந்தி குடும்பத்திற்கு அந்த ஹோட்டல் பற்றிய பழைய நினைவுகள் பல இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் விகார் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து அடுத்தப்படியாக குல்மார்க் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் எந்த ஒரு அரசியல் சந்திப்பும் இருக்காது என தெரிவித்துள்ளனர்.