TN Weather Update: அலெர்ட்! வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
வட ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரையில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தென் ஒடிசா கடற்கரையில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியின் தாக்கத்தின் கீழ், அதே பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (ஜூலை 26, 2023) அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிசா கடற்கரைகள் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வட மாநிலங்களான டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும் ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
25.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.07.2023 & 28.07.2023:தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
28.07.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.