Police Case: லாக்-அப் மரணம் உள்ளிட்ட வழக்கில் 8 பேர் பணி நீக்கம்; 828 போலீஸார் மீது வழக்கு..! சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்ட முதலமைச்சர்..!
லாக்-அப் மரணம் உள்ளிட்ட வழக்குகளில் 8 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.
லாக்-அப் மரணம் உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை 8 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாஞ்சூர் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளித்தார். அதில், ”கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 828 போலீசார் குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில்தொடர்புடைய பல்வேறு நிலைகளில் உள்ள 8 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் சிறந்த சட்டம் ஒழுங்கு உள்ளது என நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் சிறிய வழக்கு முதல் சர்ச்சைக்குரிய வழக்கு வரை காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 828 கிரிமினல் வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதில், உண்மையாக தோன்றிய வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டன. 2017, 2018, 2019, 2020ஆகிய ஆண்டுகளில் மிகவும் கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட 8 காவல் துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டில் கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனவும், ஊழல் வழக்கில் குற்றவாளி எனவும் நிரூபிக்கப்பட்ட நான்கு காவல்துறையினர் அரசால் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ”2015ஆம் ஆண்டு வரை 976 காவல்துறை அதிகாரிகள் குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாகவும், 2016ஆம் ஆண்டு இடதுசாரி முன்னணி ஆட்சியின் போது அந்த எண்ணிக்கை 828ஆக குறைந்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரதட்சணை தொடர்பான வழக்குகளில் காவல்துறை நடவடிக்கையுடன் வலுவான சமூக விழிப்புணர்வும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், காவல்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து இந்திய காவல் அறக்கட்டளை நடத்திய ஆய்வின்படி, கேரள காவல்துறை நேர்மை மற்றும் செயல் திறனுக்கான அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பணிநீக்கம் செய்வதற்கான நடைமுறை :
பணிநீக்கம் செய்வதற்கான நடைமுறை அரசியல் சாசனத்தின் 311வது பிரிவின்படி, குற்றச்செயல்களில் ஈடுபடும் காவலர்களை பணிநீக்கம் செய்யக்கூடிய அதிகாரிகளை நியமனம் செய்வதுதான். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சாட்சியங்கள் குறித்து துறை அளவிலான விசாரணைகளை நடத்திய பிறகு அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளும் தங்கள் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். ஆனால், பணிநீக்கம் உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
யாரை பணிநீக்கம் செய்ய முடியும்?
கீழ்க்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேவையில் இருந்து நீக்கப்படலாம்.
- விசாரணை காவலில் கைதிகள் மரணம்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் வரதட்சணை கொடுமை வழக்கு
- ஒரே குற்றத்தை மீண்டும் செய்பவர்கள்
- வன்முறை, நெறிமுறையற்ற குற்றங்கள்
- ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள்