புதுச்சேரியில் பேராசிரியர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
’’தனியார் நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் 3 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை’’
புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதுச்சேரி கிருமாம்பாக்கத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 3 மாணவிகள், பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு இன்று சென்று ஆய்வு செய்தனர்.
இதுபற்றி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நர்சிங் கல்லூரியில் பேராசிரியர், 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. கொரோனா தொற்று கல்லூரியிலிருந்து வரவில்லை. விடுமுறை நாட்களின் போது அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்டு அவரவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையில் உள்ளனர். கல்லூரி சென்று பரிசோதித்தோம். கல்லூரியில் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. இதனால் கல்லூரி தொடர்ந்து இயங்குகிறது என்று குறிப்பிட்டனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று:
புதுச்சேரி பகுதியில் உள்ள கரையாம்புத்தூர் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இதைத்தொடர்ந்து சுகாதார துறையினர் மாணவர்களை சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தபட்டுள்ளனர்.
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 20, காரைக்காலில் 6, ஏனாமில் 1, மாஹேவில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 112, காரைக்காலில் 30, ஏனாமில் 8, மாகேவில் 25 பேர் என 175 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 448, காரைக்காலில் 170, ஏனாமில் 27, மாகேவில் 94 பேர் என 739 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 914 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 47, காரைக்காலில் 17, ஏனாமில் 2, மாகேவில் 12 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2வது தவணை உட்பட 8 லட்சத்து 38 ஆயிரத்து 485 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.