ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கியுள்ளனரா?- மத்திய உள்துறை இணையமைச்சரின் பதில்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை எத்தனை வெளிமாநிலத்தவர் நிலம் வாங்கியுள்ளனர் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய இரண்டையும் நீக்கியது. அப்போது அங்கு தொழிற்சாலைகள் அமைக்க முடியவில்லை மற்றும் சுற்றுலா வளர்ச்சி செய்ய முடியவில்லை என்ற காரணங்களை மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்குவது தொடர்பாக நில வருவாய் சட்டத்தை திருத்தியது. அந்த திருத்தத்தின் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வசிக்கும் நபர்களும் அங்கு வேளாண் நிலம் உள்பட அனைத்து வகையான நிலங்களையும் வாங்க முடியும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யா, “ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் யாரும் நிலம் வாங்கியுள்ளனரா? அப்படி என்றால் இதுவரை எத்தனை பேர் வாங்கியுள்ளனர்? அந்த நிலங்கள் எந்த பகுதியில் அமைந்துள்ளது?” என்ற கேள்வியை அவர் கேட்டுள்ளார்.
அவருடைய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். அதில்,”ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தரவுகளின்படி தற்போது வரை அங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த 7 பேர் நிலங்களை வாங்கியுள்ளனர். அவை அனைத்தும் ஜம்மு பகுதியில் மட்டும் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2 வெளி மாநில நபர்கள் நிலம் வாங்கியதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது அது 7ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 12 மாநிலங்களில் நிலம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 371 மூலம் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு மட்டும் 370 பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு முக்கியமான கட்டுபாட்டை விதித்து வந்தது. அந்த பிரிவு அமலில் இருந்த போது ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ''என் பொண்ணு சாகவே இல்லை'' - பெரிய ட்விஸ்ட் வைத்த இந்திராணி.. குழப்பத்தில் போலீசார்!!