Andhra pradesh Accident : அச்சச்சோ.. கால்வாயில் கவிழ்ந்த டிராக்டர்.. பரிதாபமாக பறிபோன 7 உயிர்கள்..! எப்படி நடந்தது இந்த சோகம்?
ஆந்திராவில் சுபமுகூர்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ளது பிரதிபடு பகுதியில் உள்ள கொண்டபடு கிராமம். இந்த கிராமத்திற்கு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது ஜூபூடி கிராமம். கொண்டபடு கிராமத்தில் இருந்து ஜூபூடி கிராமத்திற்கு நேற்று டிராக்டர் ஒன்றில் 40 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.
டிராக்டர் கவிழ்ந்தது:
40 பேருடன் சென்ற டிராக்டர் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. வட்டிசெருக்கூர் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், அந்த இடத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. திடீரென டிரக்டர் கால்வாய் நீரில் மூழ்கியதால் டிராக்டரில் இருந்தவர்கள் பயத்தில் அலறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கால்வாய் நீரில் டிராக்டர் மூழ்கியதிலே 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதையடுத்து, தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களையும், ஆபத்தான நிலையில் இருந்தவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சுபமுகூர்த்த நிகழ்ச்சிக்காக சென்ற மிக்லி நாகம்மா, மமிதி ஜான்சி ராணி, கட்டா நிர்மலா, கரிகாபுடி மாரியம்மா, கரிகாபுடி ரத்னகுமாரி, கரிகாபுடி சுகாசினி மற்றும் சலோமி ஆகியோர் உயிரிழந்தவர்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
7 பேர் உயிரிழப்பு:
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட எஸ்.பி. ஆரீப் ஹபீஸ், முதற்கட்ட விசாரணையில் டிராக்டர் அதிவேகமாக சென்றதும், அதனால் கட்டுப்பாட்டை இழந்ததுமே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது என்றும், 3 பேர் சம்பவ இடத்திலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வழியிலும் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து குண்டூர் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வேணுகோபால் ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மாநில அமைச்சர் அம்பத்தி ரம்பாடு குண்டூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெறுபவர்களை நலம் விசாரித்தார். சுபமுகூர்த்த நிகழ்ச்சிக்காக சென்றபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Fact Check: ஒடிசா ரயில் விபத்துக்கு சம்பவ இடத்திற்கு மசூதி காரணமா? இதுதான் உண்மை.. வெறுப்பு பிரச்சாரத்தை கண்டிக்கும் நெட்டிசன்ஸ்
மேலும் படிக்க: வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது... மறைமுகமாக விமர்சித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!