5g Auction: 5ஜி ஏலம்; ஸ்பெக்ட்ரம் ஊழலா? வெறும் குற்றச்சாட்டா? என்ன நடந்தது ஏலத்தில்?
5g Spectrum Auction: இதன் மூலம் வினோத் ராய் எவ்வளவு பெரிய மோசடியைச் செய்துள்ளார், அவர் யாருக்காகச் செய்தார்? என்பது பற்றி பாஜக அரசு விசாரிக்க வேண்டும்.
இந்திய நாடு முழுவதும் தொலைத்தொடர்பு துறையில் தற்போது 4 ஜி (நான்காவது தலைமுறை) சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக 5 ஜி (ஐந்தாவது தலைமுறை) அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5 ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தால், இணையதள வேகம் தற்போதைய வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5 ஜி சேவை, முக்கியமான மெட்ரோ நகரங்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைக்கற்றை ஏலம் என்றால் என்ன?
இந்தியாவில் தொலைபேசத் தேவைப்படும் மின்காந்த அலைக்கற்றைகளுக்கான அனுமதியை அளிப்பதற்காக, மத்திய தொலைத்தொடர்புத் துறை ( Department of Telecommunications -DoT) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏலத்தை நடத்துகிறது. இந்தியாவின் முதல் ஏலம் 1994-ம் ஆண்டு நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஜி ஏலத்தில், ஊழல் நடந்ததாகக் கடுமையான விவாதங்கள் கிளம்பின. 3ஜி, 4ஜி ஏலங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 2022ஆம் ஆண்டில், தற்போது 5ஜி ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஏல வகைகள்
5ஜி அலைக்கற்றை ஏலம் குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் விடப்படுகிறது. 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண் வகைகள் ஆகும். 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் வகையிலும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் வகையிலும் வருகின்றன. இந்த மூன்று வகைகளுக்கும்தான் ஏலம் நடைபெற்றது.
எந்த மொபைல் நிறுவனங்களில் எவ்வளவு வாடிக்கையாளர்கள்?
கடந்த 2022, ஏப்ரல் 31-ம் தேதி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஜியோ நிறுவனம் 40.56 கோடி (40,56,76,025) மொபைல் பயனர்களைக் கொண்டுள்ளது. ஏர்டெல் 36.11 கோடி (36,11,47,280) மொபைல் பயனர்களையும், வோடபோன் ஐடியா 25.92 கோடி (25,92,06,066) பயனர்களையும் கொண்டுள்ளன. பிஎஸ்என்எல் 11.33 கோடி (11,33,18,603) வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துள்ளது. இந்த 4 தொலைதொடர்பு நிறுவனங்களைத் தவிர ரிலையன்ஸ்.காம் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரு நிறுவனங்களும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களைக் கைவசம் வைத்துள்ளன.
பாதிக்கும் மேல் ஜியோ வசம்
இதே தேதியிலான தரவுகளின் அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் வாடிக்கையாளர்களில் 52.15 சதவீதம் பேரை ஜியோ தன் வசம் வைத்துள்ளது. பாரதி ஏர்டெல்லை 27.29 சதவீதம் பேரும் வோடஃபோன் ஐடியாவை 15.47% பேரும் பிஎஸ்என்எல்லை 3.31% பேரும் பயன்படுத்தி வருகின்றனர். பிற நிறுவனங்களை 1.77% மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றைகளுக்கான உரிமத்தைப் பெற்று, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. 20 ஆண்டு காலத்துக்கு 10 ஃப்ரீக்வன்ஸி பேண்ட்களில் அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. இதில் 72.09 ஜிகாஹெர்ட்ஸ் (72,098 மெகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்பகட்ட, அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது.
பலமுறை ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு, இறுதியாக 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
5ஜி அலைக்கற்றைக்கான முதல் நாள் ஏலத்தில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனது. ஆனால் 6 நாட்களுக்குப் பிறகு, 40 கட்ட ஏலம் முடிவடைந்த நிலையிலும் ஏல விற்பனை ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டவில்லை. இதில், மத்திய அரசுக்கு ரூ.1,50,173 கோடி (சுமார் ரூ.1.50 லட்சம் கோடி) மட்டுமே கிடைத்துள்ளது.
முதலிடத்தில் ஜியோ
அதாவது அரசு ஏலம் விட்ட 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 71% மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 51,236 மெகாஹெர்ட்ஸ் ரூ. 1,50,173 கோடிக்கு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 24,740 மெகாஹெர்ட்ஸை ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கான மொத்த மதிப்பு ரூ.88,078 கோடி ஆகும். 5ஜி சேவைக்கு முக்கியமான 700 MHz மற்றும் 1800 MHz, 3,300 MHz, 26 GHz ஆகிய அனைத்து அலைக்கற்றைகளும் இதில் அடக்கம். இதன்மூலம் ஒட்டுமொத்த 5ஜி சேவையை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, முதலிடத்தில் இருக்கப்போகிறது.
ஜியோவுக்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் 19,868 மெகாஹெர்ட்ஸை ரூ.43,084 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 3ஆவதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் 6,228 மெகாஹெர்ட்ஸை ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் 400 மெகாஹெர்ட்ஸை ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. இதில் தொலைத்தொடர்புத் துறைக்கு புதிய நபரான அதானி நிறுவனம், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் ஏலம் எடுத்துள்ளது.
20 தவணைகளாகச் செலுத்த அனுமதி
இஎம்டி எனப்படும் ஏலத்துக்கான காப்புத் தொகையை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ளன. இந்த நிலையில் 20 ஆண்டு கால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாகச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான ஏலத் தொகையை மொத்தமாகச் செலுத்த வேண்டியதில்லை. ஒவ்வொர் ஆண்டின் ஆரம்பத்திலும் அவ்வாண்டுக்கான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.
இந்த நிலையில் பாஜக ஆட்சியில் 5ஜிஅலைக்கற்றை ஏலம் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜக ஊழலா?
எனினும் 5ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்துள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்துத் திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கூறும்போது, ''5ஜி ஏலம் ஒரு மிகப்பெரிய மோசடி. இந்த ஏலத்தைப் பற்றி ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ட்ராய் பரிந்துரையின்பேரில் 30 MHz 2ஜி அலைக்கற்றையை நான் அளித்தபோது ரூ.1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டதாக அன்றைய சிஏஜி (தலைமை கணக்குத் தணிக்கையாளர்) வினோத் ராய் அறிக்கை கொடுத்தார்.
ஆனால் இன்று 51 GHz அலைக்கற்றைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் கிடைத்துள்ள வருமானம் என்பது ரூ.1.50 லட்சம் கோடி மட்டுமே. 2ஜி, 5ஜி வித்தியாசம், அலைக்கற்றையின் திறன், அளவு ஆகியவற்றை அறிந்துகொண்டாலே, இந்த ஏலத்தில் எவ்வளவு மோசடி நடைபெற்றுள்ளது என்பதை அறிய முடியும். இதன் மூலம் வினோத் ராய் எவ்வளவு பெரிய மோசடியைச் செய்துள்ளார், அவர் யாருக்காகச் செய்தார்? என்பது பற்றி பாஜக அரசு விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரிக்கத் தவறினால், இந்த அரசாங்கம் மாறும்போது வருங்காலத்தில் வரும் அரசு 5ஜி ஊழல் குறித்து விசாரிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிர்வாகத் திறனா?
5ஜி அலைக்கற்றை ஏல விற்பனை ரூ.1.5 லட்சம் கோடிதான். என்றாலும் இது 4ஜி அலைக்கற்றை விற்பனையான ரூ.77,815 கோடியைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம். அதேபோல 3ஜி விற்பனையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்கின்றனர் பாஜகவினர். இதன்மூலம் ஆளும் பாஜக அரசின் நிர்வாகத் திறன் வெளிப்பட்டுள்ளதாகவே அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன், ''இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டுக்கு மிகப்பெரிய வருமானத்தை 5ஜி ஏலம் தந்துள்ளது. 8 ஆண்டு காலமாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல், ஊழல், லஞ்சம் புகார் இல்லாமல், பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, திறமையான அரசாக செயல்பட்டு வருகிறோம். ஆ.ராசா இதில் தவறு நடந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கான ஆதாரங்களை முன்வைக்கட்டும்.
2ஜி அலைக்கற்றையின் பெயரை அடைமொழியாகக் கொண்டுள்ள ஆ.ராசா, ஏன் இப்படிச் சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருக்குத்தான் எங்கு தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று தெரியும். இலக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் ஏலம் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன்தான் நடந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
ரூ.1.76 லட்சம் கோடி- இது வெறும் எண் அல்ல.
இந்திய நாட்டையே ஆண்டு கொண்டிருந்த மத்திய அரசாங்கத்தைப் புரட்டிப்போட்ட மாயாஜால எண். ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் நடைபெற்றதாகவும், அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடைபெற்றதாகவும் வெளியான தணிக்கை அறிக்கை, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது ஆட்சியின் ஆணிவேரையே அசைத்து, ஆட்சி மாற்றத்துக்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாகவும் மாறியது.
ஆனால் தற்போது வெறும் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே 5ஜி ஏலம் நடந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசர, அவசியம் ஆகும்.