JN1 variant: கர்நாடகாவில் 34 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு - மக்கள் அச்சம்
கர்நாடகாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கமும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பும், உலகம் முழுவதும் சந்தித்த ஊரடங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பேரிடரில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கொரோனா புதிய வடிவத்தில் அச்சுறுத்தி வருகிறது.
கர்நாடகாவை அச்சுறுத்தும் ஜே.என்.1:
ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜே.என்.1 கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசால் 34 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 25 பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் பெங்களூரில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கர்நாடகாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பால் மக்கள் அச்சம்:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 628 பேர் புதியதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 63 பேர் மட்டும் ஜே.என்.1 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக காலையில் தகவல்கள் வெளியானது. கொரோனா வைரசால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 5 லட்சத்து 33 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 742 ஆக இருந்த நிலையில், திங்கள்கிழமையான இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஜே.என்.1 கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, சண்டிகர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Covid JN.1: அச்சுறுத்தும் JN.1 வகை கொரோனா! என்ன செய்ய வேண்டும்? உலக சுகாதார அமைப்பு அட்வைஸ்!
மேலும் படிக்க: மாரடைப்பால் ஆசிரியர் மேல் சரிந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம் - ராஜஸ்தானில் சோகம்