Covid JN.1: அச்சுறுத்தும் JN.1 வகை கொரோனா! என்ன செய்ய வேண்டும்? உலக சுகாதார அமைப்பு அட்வைஸ்!
சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா பாதிப்பு:
இருப்பினும், கொரோனா வைரஸ், உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இச்சூழலில்தான், நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஜேஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மற்றம் சண்டிகரில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட சுவாச நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கண்காணிப்பை வலுப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டு கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்:
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "கொரோனா வைரஸ் உலகளவில் அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து உருமாறி, பரவி வருகிறது. JN.1 வகை கொரோனாவால் ஏற்படும் பொது சுகாதார ஆபத்து குறைவாக இருப்பதாகக் சான்றுகள் கூறினாலும், வைரஸ்களின் பரிணாமத்தை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்காக, கண்காணிப்பையும் வைரஸ் வகைப்படுத்தலையும் வலுப்படுத்த வேண்டும். இது தொடர்பான தரவுகள் சரியாக பகிரப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக குளிர்காலம் தொடங்கும் நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை நாட்களில் மக்கள் பயணம் செய்து பண்டிகை காலத்திற்காக கூடிவருவதால், காற்றோட்டம் குறைவாக இருப்பதால், சுவாச நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள் பரவுவதை எளிதாக்குகிறது. அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
JN.1 உட்பட அனைத்து கொரோனா வகைகளிலிருந்தும் ஏற்படும் கடுமையான நோய்கள், இறப்புகளுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்கின்றன" என்றார்.
ஜேஎன் 1 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.