கொத்து கொத்தாக பணம்... சிக்கிய எம்எல்ஏக்கள்...குறிவைக்கப்படும் ஜார்க்கண்ட் அரசு
மேற்கு வங்கத்தில் நேற்று பணக் குவியலுடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நேற்று பணக் குவியலுடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மேற்கொள்ளும் என்று அலுவலர்கள் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மாநில அரசை கவிழ்க்க மூன்று பேருக்கும் பணம் கொடுக்கப்பட்டதாகவும் இதற்கும் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததற்கான ஆதாரமாக இந்த பணம் சிக்கியது என பாஜக பதிலடி அளித்துள்ளது.
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 10 கோடி ரூபாய் வழங்குவதன் மூலம் ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கைது செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலம், "மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவியும், தலா 10 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி மற்ற எம்எல்ஏக்களை கைது செய்யப்பட்ட மூன்று எம்எல்ஏக்கள் ஏமாற்றியதாக காங்கிரஸ் எம்எல்ஏ குமார் ஜெய்மங்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்" என்றார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே கூறுகையில், "அனைவரை பற்றியும் எங்களிடம் தகவல் உள்ளது. வரும் நாள்களில், மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், கட்சியின் அலுவலக அதிகாரியாக இருந்தாலும், எந்த ஒரு தொழிலாளியாக இருந்தாலும், யாராக இருந்தாலும், அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவினாஷ் பாண்டே, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூன்று எம்எல்ஏக்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்" என்றார்.
ஜம்தாராவைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, கிஜ்ரியைச் சேர்ந்த ராஜேஷ் கச்சாப் மற்றும் கோலேபிராவைச் சேர்ந்த நமன் பிக்சல் கொங்காரி ஆகிய மூன்று எம்எல்ஏக்களிடம் ஹவுரா போலீஸார் பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு ரகசிய தகவலின் பேரில், சனிக்கிழமையன்று, ஹவுராவில் உள்ள ராணிஹாட்டியில் தேசிய நெடுஞ்சாலை-16 இல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பயணித்த எஸ்யூவியை போலீஸார் தடுத்து நிறுத்தி, வாகனத்திலிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்