ஜிஎஸ்டி வரியால் புதுச்சேரி அரசுக்கு கடும் நிதியிழப்பு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு...!
ஜிஎஸ்டி வரியின் இலக்கு அடிப்படையிலான வரிவிதிப்பு கொள்கையால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசின், பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் எளிமையான முறையில் நடைபெற்றது, முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சுதந்திர தின விழா உரையாற்றினார் அதில் மக்கள் காய்கறி மாடித்தோட்டம் அமைக்க 3000 ரூபாய் மதிப்பிலான விதைகள் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள் அடங்கிய பைகள் 75 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ சமுதாய மக்களுக்கு ஓய்வூதியம் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்,
மேலும் சரக்கு மற்றும் சேவை வரியின் இலக்கு அடிப்படையிலான வரிவிதிப்பு கொள்கையின் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை சுமார் 7.60 லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளன, அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலின் விகிதமும், இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது என தெரிவித்த அவர், கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை நிலை நிறுத்த புதுச்சேரி மக்கள் தங்களது ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார், தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் பாராட்டினர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலை மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர், வழக்கமாக இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி கடற்கரைச் சாலையில் எளிமையான முறையில் நடைபெற்றது, மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பும் இம்முறை ரத்து செய்யப்பட்டது.
Independence Day 2021 : 75வது சுதந்திர தினம் - 59 அடி வைர விழா நினைவுத்தூணை திறந்து வைத்த ஸ்டாலின்!