(Source: ECI/ABP News/ABP Majha)
திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் - மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க கோரிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும்,
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதி மூன்றாம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்திருந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கோறும் நிதியை மத்திய அரசு குறைக்காமல் உடனடியாக வழங்கிட வேண்டும், அறுவடையாகும் நிலையில் மழை நீரில் மூழ்கி அழிந்து போன குறுவை நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், தோட்டப்பயிர்கள் பாதிப்பிற்கு உரிய அளவில் நிவாரணம் வழங்கிட வேண்டும், மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆடு மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்மழையால் வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச உணவு பொருளோடு 3000 வழங்கிட வேண்டும், 2020-21 ஆம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் விடுபட்டுப்போன கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.