Bhairavi Senthil on Raisa: சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மது அருந்தக்கூடாது; நடிகை ரைசா விவகாரத்தில் டாக்டர் தரப்பு விளக்கம்
நடிகை ரைசாவிடம் 5 கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதாக நடிகை ரைசா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார். தனக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவர் பைரவி செந்தில் மீது நடிகை ரைசா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், பைரவி செந்தில் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி செந்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அதில், ‘ரைசா அதே சிகிச்சையை மூன்று முறை எங்களிடமே செய்திருக்கிறார். எங்களுக்கு கடும் மன வேதனை ஏற்பட்டுள்ளது. எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்பட்டுள்ளார். ரைசாவிடம் 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.
ரைசா உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைசா எடுத்துக் கொண்டார். அவரது ஒப்புதலுடன் தான் சிகிச்சை செய்யப்பட்டது. 3 நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும்.
சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது. முக வீக்கம் ஒரு வாரத்தில் தானாக நீங்கிவிடும்” என்று கூறினார்.
மாடலாக இருந்து தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வருபவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். தற்போது காதலிக்க நேரமில்லை, எப்.ஐ.ஆர். உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் கடந்த 20ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவர் வலதுபுற கண்ணின் கீழே முகம் வீங்கிய நிலையில் காணப்பட்டிருந்தார். மேலும், அந்த படத்திற்கு கீழே தனது முகம் இப்படி வீங்கிய காரணத்தையும் கூறியிருந்தார்.
அதில், தோல் மருத்துவர் பைரவி செந்திலிடம் எளியமுறையில் ஃபேஷியல் செய்ய சென்றிருந்தாகவும், ஆனால், அவர் தன்னை கட்டாயப்படுத்தி தனக்கு விருப்பமில்லாத அழகுக்கலை முறைகளை செய்ததாலேயே தனது முகம் வீங்கியதாக பதிவிட்டிருந்தார். மேலும், தனது முகம் வீங்கியதைத் தொடர்ந்து அந்த தோல் மருத்துவர் தன்னை சந்திக்கவோ, தன்னுடன் பேசவோ மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ரைசாவின் வீங்கிய முகத்தை கண்டு சமூக வலைதளங்களில் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த தோல் மருத்துவரையும் கடுமையாக விமர்சித்தனர்.
நடிகை ரைசா குற்றம்சாட்டியுள்ள மருத்துவர் பைரவி செந்தில், 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. டெர்மடாலாஜி முடித்துள்ள பைரவி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல்வேறு தோல் மற்றும் அழகுக்கலை அறிவுரைகளை வழங்கி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 45 ஆயிரம் நபர்கள் பின்தொடர்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் நடிகைகள் பலரும் தங்களது முக அமைப்பு மற்றும் உடல் அமைப்புக்கான சிகிச்சையை இவரிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.