விறுவிறுப்பாக நடக்கும் தூத்துக்குடி விமான நிலைய பணிகள்! நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தில் ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையவுள்ளது
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதியமுனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்புஅறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்தமாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளது.
இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது, தூத்துக்குடி விமானநிலைய இயக்குநர் ராஜேஷ், முனைய கட்டுமானப் பிரிவுத் தலைவர் பாரி, பொதுமேலாளர் (மின்னணுவியல் பிரிவு) வி.எஸ்.கிருஷ்ணன், இணைப் பொதுமேலாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடன் இருந்தனர்.