“பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு” - பெண்களிடம் கவர்ச்சி திட்டங்களை சொல்லி 5 மாவட்டங்களில் பல கோடி மோசடி
தருமபுரி மாவட்டத்தில் பல கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்த நகை கடை உரிமையாளரை புதுச்சேரியில் கைது செய்து, பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிவக்கை.
சேலம் வீராணம் அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர் என்பவர் சேலம், தருமபுரி, நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்ளிட்ட 11 பகுதிகளில் எஸ்.வி.எஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நகை கடையில் மக்களை கவரும் வகையில் பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் மற்றும் நகைகளை பெற்றுள்ளனர். ஆனால் தீபாவளி பண்டிகை்கு முன்னரே இந்த கடையை பூட்டி விட்டு மக்களிடம் வாங்கிய நகை, பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பழைய நகை மற்றும் சீட்டு தொகை என சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனால் தங்க நகை மற்றும் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த நகைக்கடை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் நகைக் கடை உரிமையாள்ர சபரி சங்கர், மேலாளர் கவின் அஜித் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு, சபரிசங்கர் மீது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி, நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்ளிட்ட 11 பகுதிகளில் 1000 - க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 15 புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 13.75 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சபரிசங்கரின் செல்போன் சிக்னலை வைத்து, புதுச்சேரியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த சபரிசங்கரை நேற்று கைது செய்த, தருமபுரிக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அரூர், தருமபுரி நகரில் உள்ள நகை கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி, நகை கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து 5 மாவட்டங்களில் நகை நடத்தி, கவர்ச்சி திட்டங்களை கொடுத்து ரூ.15 கோடி மோசடி செய்த சபரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 11 இடங்களில் நகை கடை வைத்து, பெண்களுக்கு கவர்ச்சி திட்டங்களை சொல்லி, பலபேரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த சம்பவம், பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.