கடத்தல் கார்களை நோட்டமிட்டு அடிக்கும் கும்பல்; சினிமா போல சேஸிங் - தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
பெங்களூரிலிருந்து குட்கா கடத்தி வந்த காரை சினிமா பாணியில் துரத்திய கும்பல். கார் மீது மோதிவிட்டு டிரைவர் எஸ்கேப். 40 மூட்டை குட்கா பறிமுதல்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கார், வேன், சரக்கு லாரிகளில் குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் கார், வேன் ஆகியவற்றை குறி வைத்து மர்ம கும்பல் மடக்குவதும், பொருட்களை அபகரிப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மட்டும் இன்றி தங்கம், ஹவாலா பணம் உள்ளிட்டவற்றை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு வரும்போதும், தகவல் அறிந்த கும்பல் அவற்றை மடக்கி கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் குடியிருப்பு அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை, ஒரு கார் அதிவேகமாக பின்னாடியே துரத்தி வந்துள்ளது.
ஏதோ சினிமா பட சேஸிங் போல, இரண்டு கார்களும் சென்றுள்ளது. சிறிது தூரம் சென்ற நிலையில், பின்னால் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து பின்னால் வந்த கார், நிற்காமல் அதிவேகமாக பறந்து சென்றது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான கார் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்தக் காரில் இருந்து இறங்கிய டிரைவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான காரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது கார் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பாதைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது காரின் உள்ளே 40 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரையும், விபத்து ஏற்படுத்திய மற்றொரு கும்பல் வந்த காரையும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர். மேலும் தொப்பூர் காவல் நிலைய பகுதிகளில் குட்கா கடத்திச் செல்லும் கார்கள், அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
குட்கா பொருட்களை கடத்திச் செல்லும் கார்களை நோட்டமிடும் மர்ம கும்பல், அவர்களை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பிடிக்க முடியாத வாகனங்களை போலீசாரிடம் மாட்டி விடுகின்றனர்.
இல்லை என்றால் சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே இடித்து விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவம் நடந்து வருகிறது. அதே போன்று நேற்றுமுன்தினம் மாலை பெங்களூரில் இருந்து 40 மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி வந்த காரை மர்ம கும்பல் துரத்தியுள்ளது. மேலும் குட்கா கடத்திச் சென்ற டிரைவர் தப்பித்துக் கொள்ள, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல திருப்பம் ஒன்றில் திரும்பியதுடன், சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுள்ளார்.
ஆனால் காரை துரத்தி வந்த கும்பல் தொப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்கள் வந்ததால் காருடன் தப்பி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.