நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுக்கு பின் முதல் முறையாக மக்கள் தொடர்பு முகாம் - மலை கிராம மக்களுடன் ஆட்சியர்
ஆவலூர் மலை கிராமத்தில் முதல் முறையாக நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 188 பயனாளிகளுக்கு ரூ.1.15 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆவலூர் மலை கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய் துறை, வேளாண்மை, தோட்டக்கலை, சுகாதாரா துறை, பட்டு வளர்ச்சி துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், கூட்டுறவு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 188 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்ளை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்கு பிறகு கோட்டப்பட்டி அடுத்த ஆவலூர் மலை கிராமத்தில், முதன் முறையாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மலைவாழ் மக்கள் சிரமங்களை போக்கும் வகையில் அனைத்து துறையின் முதன்மை அலுவலர்களும் கலந்து கொண்டு, தங்களது துறையில் உள்ள அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்
மேலும் இந்த மக்கள் தொடர்பு திட்டம் மிகவும் பின்தங்கிய மழை கிராமங்களை தேர்வு செய்து அந்த மக்களிடம் மனு பெறுவதற்காகவும், அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைய வேண்டும் என முதலமைச்சர் உத்திரவிட்டிருக்கிறார். மேலும் மலை கிராமங்களில் உள்ள மக்கள் நகர்ப் புறங்களில் உள்ள மக்களுக்கு இணையான சேவைகளை பெற வேண்டும், அரசின் திட்டங்கள் எளிமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது.
மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து மாவட்டங்களை இணைக்கும் சாலை
ஆவலூர், சிலம்பை, குழுமிநத்தம், மங்களப்பட்டி, சூரநத்தம் உள்ளிட்ட மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சிலம்பை முதல் கண்ணூர் வரையிலான சாலை அமைத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைப்பதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டு சாத்திய கூறுகள் இருப்பின் புதிய தார் சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் போட்டி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்
மேலும் இந்த மலை கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும். அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.அதே போல் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கின்ற மலை கிராம மாணவ மாணவிகள் மேற்படிப்பிற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, அரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.