தொப்பூரில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் - உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்
தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் -அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் உயிர் தப்பினர்.
தருமபுரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் உயிர் தப்பினர்.
பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தது அடிப்படையில் 750 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது கிருஷ்ணகிரி முதல் சேலம் மாவட்டம் எல்லை வரை உள்ள 86 கிலோ மீட்டர் சாலையை மேம்பாட்டு பணி, தொப்பூர் வனப்பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தொப்பூர் வன சாலையில் இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு அந்த வழியாக சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை தருமபுரி அரசு நகர பேருந்து தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து 5பி தொப்பையார் டேம் வரை செல்லும் அந்த பேருந்தில் காலை நேரம் என்பதால் தொப்பூர் பள்ளிக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த நிலையில் திடீரென்று ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள செல்லும் பொழுது பேருந்தின் பிரேக் பழுதானதால் எதிரே சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற ஈச்சர் லாரியின் மீது மோதியது. இதில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் லாரியின் ஓட்டுநர்கள் சேலம் அரியலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (27), எடப்பாடி கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண் (23), சேலம் அரியலூர் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் கண்ணன் (19) ஆகிய மூன்று இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதனை அடுத்து விபத்தில் சிக்கியவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் 13 பேர் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினந்தோறும் தொப்பூர் வனப்பகுதி வெள்ளக்கல் பகுதியில் இருந்து இரட்டைப் பாலம் வரை இரண்டு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.