மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டோருக்கு கிடைக்குமா? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன மகிழ்ச்சி செய்தி
ஜிடிபியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. ரிசர்வ் வங்கி தான் சொன்னது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விடுபட்ட தகுதியுடையோர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கும் நிச்சயம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூர் கிராமத்தில், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மகன் பி.எழில்மறவன்-கிருத்திகா திருமணத்தை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசினார்.
ஜிடிபியில் தமிழ்நாடு முதலிடம்
அப்போது பேசிய முதலமைச்சர், “பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் நிலையில், உங்களை பார்க்கும்போது, மனதிற்கு ரிலாக்ஸாக உள்ளது. நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் பெண்களுக்கான திட்டத்தில் வெற்றி பெற்றுள்ள திட்டங்கள் ஒருங்கிணைத்து வெல்லும் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 17 லட்சம் மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. ஏற்கனவே 1.13 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டது. தற்போது 1.30 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. இன்னும் தகுதியுள்ள மகளிருக்கு வழங்க உள்ளோம். அதற்கு தகுதியுள்ளவர்கள் மேல் முறையீடு செய்யலாம். ஜிடிபியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. ரிசர்வ் வங்கி தான் சொன்னது. எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் செய்து வருகிறோம்.
7வது முறையாக திராவிட ஆட்சி
இன்னொரு பக்கம் தேர்தல் பணி. எஸ்ஐஆர் பணி. இதை திருமா பெருமையாக சொன்னார். திமுக சிறப்பாக செயல்படுகிறது என்று. அது உண்மை தான். நமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். இப்போ பாதி வேலைதான் முடிந்துள்ளது. தேர்தல் நடந்து, முடிவுகள் வந்ததால்தான் முழுவதும் முடியும். மக்களிடம் நமது திட்டங்களை, சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்து சொல்லி, வாக்குகளால் மாற்ற வேண்டும். நமது திமுக வெற்றி பெற வேண்டும், 7-வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும். 7வது முறையாக திராவிட ஆட்சி உருவாகவேண்டும்.
பழனியப்பன், ஆளுங்கட்சி அமைச்சராக இருக்கும்போது, அதிமுக இருக்கும் துறை ரீதியான கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்வார். மற்ற அமைச்சர்கள் கண்டதை பேசுவார்கள். திங்கள் உள்ளே இருக்க மாட்டோம். ஆனால் பழனியப்பன் உரையாற்றினால் நாங்கள் அனைவரும் கேட்போம்” எனப் பேசினார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




















