COVID and Mental health | வெளிவந்தது கொரோனாவின் இன்னொரு முகம்: மன அழுத்தத்தில் தவிக்கும் மக்கள்
மருத்துவமனைக் கொரோனா வார்ட் ஒன்றில் மருத்துவரும் செவிலியரும் வெளிப்படையாகவே அடித்துக்கொள்கிறார்கள். 'நாங்க யாருமே நிம்மதியாக இல்லை’ என்கிறார் அரசு மருத்துவமனைச் செவிலியர். ‘நிலைமையைச் சமாளிக்க முடியாமல் மனநல நிபுணர்கள் நிறையபேர் இந்த வேலையிலிருந்தே ஒதுங்கிவிட்டார்கள்’ என்கிறார் மனநலநிபுணர் ஒருவர். இவையெல்லாம் கொரோனாவின் அறிவிக்கப்படாத இன்னொரு முகம்.
இந்தியாவின் தகனமேடைகள் விடாமல் எரிந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அன்றாடம் ஒலிக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஒலி இங்கே சாலைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. படுக்கைத் தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகளில் தாழ்வாரங்களும் அதன் வெளிப்புறச்சாலைகளும் நோயாளிகளுக்குப் படுக்கையாகி வருகின்றன.
பிச்சையெடுத்தாவது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுங்கள் என்று நீதிமன்றம் சொல்கிறது. மருத்துவர்கள் சொல்லாமல் எதையும் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்பவர்கள் எல்லாம் ’வீட்டிலேயே உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள் நிலைமை மோசமடைந்தாலொழிய மருத்துவமனைக்கு வரவேண்டாம்’ என அறிவுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வீட்டிலேயே முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டிய காலக்கட்டம் நெருங்கிவிட்டதாக அரசின் கொரொனா செயற்பாட்டுக்குழுத் தலைவரே அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.இப்படி நாட்டை நாசகாரம் செய்துகொண்டிருக்கிறது கொரோனா.
- முதல்நாள் இறந்தத் தன் தாயின் உடலைத் தேடமுடியவில்லை என சென்னை மருத்துவமனையின் பிணவறை வாசலில் அமர்ந்தபடி கதறுகிறார் ஒருவர்.
- நான்கு மாதம் கருவூற்றிருக்கும் சூரத்தின் ஒரு செவிலியர் அயர்வில்லாமல் கொரோனா வார்டுகளில் வேலைபார்த்து வருகிறார்.
- எனது அப்பாவின் உடலை தகனம் செய்ய எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். சாலையில் இரண்டுமணிநேரமாக வாகனங்கள் நகராமல் நிற்கின்றன. எங்களுக்கு யாரேனும் உதவுங்கள் என ட்விட்டர் வலைத்தளத்தில் கதறுகிறார் பத்திரிகையாளர் பாகர் தத்
- கேரளாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் கொரோனா பாதுகாப்புக் கவசம் அணிந்துகொண்டு திருமணம் செய்துகொள்கிறார்கள் தம்பதியினர்கள்.
- உத்திரப்பிரதேசத்தின் கொரோனா வார்டில் ஒரு மருத்துவரும் செவிலியரும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். பணிச்சுமை மன அழுத்தம் காரணமாக அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள மனச்சிக்கல்கள் குறித்து இந்திய அளவில் அதிகாரபூர்வமாக இப்படிப் பேசுவது இதுவே முதல்முறை.
இப்படி ஆம்புலன்ஸ் இரைச்சல்களும், நிரம்பி வழியும் தகன மேடைகளும், இறப்பு குறித்த பதிவுகளும், தத்தளிக்கும் மருத்துவமனைகளும் இனி இதுதான் நமது புதிய இயல்புநிலையாக இருக்குமோ என்கிற அச்சம் மக்களை நாளுக்கு நாள் அழுத்திக் கொண்டிருக்கிறது. நோயாளிகளுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும்தான் கடவுள் என்றால் அந்தக் கடவுள் கூட இந்த அழுத்தத்துக்கு விதிவிலக்கல்ல எனலாம்.
’என் பொண்ணுக்குக் கருகலைஞ்சு போச்சு ஆனால் எனக்கு அழக்கூட நேரமில்லை..’
’நாங்க யாருமே நிம்மதியா இல்லங்க’ எனக் கதறுகிறார் சென்னை அரசு மருத்துவமனையின் பெயர் வெளியிட விரும்பாதச் செவிலியர் ஒருவர்.கொரோனா ஏற்படுத்தியுள்ள மன அழுத்தம், மன உளைச்சல் குறித்துப் பேசக்கூட அவர்களுக்கு நேரமில்லை என்பதுதான் நிதர்சனம். ’80 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் என தொடர்ச்சியாக 48 மணி நேரம் உழைக்கிறோம். இதில் நாங்க யாரிடம் போய் எங்க மனக்குமுறலைச் சொல்ல’ எனப் பேசத் தொடங்கியவர் குரல் தழுதழுக்க நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.
’முதல் அலைக் கொரோனா வந்தபோது நாங்கள் ஈடுபாட்டோடுக் களமிறங்கிச் செயல்பட்டோம். நர்ஸ்ங்க எல்லாம் பேய்ங்க என்று எங்களைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு நோயாளிகளுக்காக உழைத்தோம். நோயாளிகளின் உரிமைகளுக்காக அவர்களுடன் நின்றோம். எங்களைப் பேய் என்று பெயரெடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி இருந்தது. ஆனால் இரண்டாம் அலையில் நாங்கள் யாருமே நிம்மதியாக இல்லை. அதிக மரண எண்ணிக்கை, மற்றும் ஆக்சிஜன், படுக்கைவசதிப் பற்றாக்குறை குறித்த தவறான தகவல்கள் காரணத்தால் மருத்துவமனை வாசலில் மக்கள் குவிந்துகிடக்கிறார்கள். இதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிபாரிசுடன் வந்துத் தங்களுக்குப் படுக்கைவசதி வேண்டும் அதுவும் குறிப்பிட்ட மருத்துவமனையில்தான் வேண்டும் என்று அழுத்தம் வேறு. உயிருக்குப் போராடும் நோயாளிகளைப் பார்ப்பதா அல்லது இவர்களது சிபாரிசுகளுக்குச் செவி சாய்ப்பதா? காலையில் 7 மணிக்கு எங்கள் பணிகளைத் தொடங்கினால் 80 நோயாளிகளின் நிலையைக் கண்காணித்து மருந்துகளைக் கொடுத்து, சார்ட் தயாரித்து, ரிப்போர்ட்கள் எழுதுவது என மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு வருடத்தில் எங்களுக்கான தனிப்பட்ட நேரமே கிடைக்கவில்லை. உடல்நலனைப் பார்த்துக்கொள்வது கிலோ என்னவிலை கதையாகிவிட்டது. எங்கள் வீட்டிலேயே நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் ஆனால் என்னால் அதில் இருக்கமுடியவில்லை.என் மகளுக்குச் சென்ற வாரம் கருகலைந்துவிட்டது. ஃபோனில் அவசரமாக அழைத்துச் சொல்கிறாள். அழுவதற்குக் கூட எனக்கு அங்கே நேர அவகாசமில்லை, ரிப்போர்ட் எழுதவேண்டிய வேலை இருந்தது. வீட்டில் இருந்த மற்றவர்கள்தான் அவளைத் தற்போது பார்த்துக்கொள்கிறார்கள். கொரோனா பரிசோதனை முகாமில் என்னுடன் வேலைபார்த்த இளம் செவிலியர் ஒரு பெண்ணுக்கு பரிசோதனைக் கூடத்திலேயே கரு கலைந்து ரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. பிறகு அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைந்தோம். எங்களது சக்தியை விட மருத்துவர்கள் ஐந்து மடங்கு அதிகமான அழுத்தத்தை எங்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே வந்து மூச்சுவிடமாட்டோமா? என்றிருக்கிறது. மூச்சுக்காற்றுக்காக நாங்கள் ஏங்குகிறோம்’ எனச் சொல்லி அழுகிறார்.
ஜனவரி 2021 வரையில் மட்டும் 13,550 புகார்கள் வந்துள்ளன. பேசியவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் 29 சதவிகிதம் பேர் பெண்கள். அழைத்தவர்களில் 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதமானது முதல் மிகத்தீவிரமானது வரை மன அழுத்தம் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
முதல் கொரோனா அலை நோயாளிகளில் மற்றும் பொதுமக்களில் அதிக மன அழுத்தத்தை உண்டு பண்ணியது என்றால் இரண்டாம் அலை நோயாளிகள், பொதுமக்கள், செவிலியர், மருத்துவர்கள், அரசு எனப் பாரபட்சமின்றி அனைவரிலும் ஒரு நிச்சயமின்மையை உண்டுபண்ணியிருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு வரை 7ல் 1 இந்தியருக்கு ஏதோ ஒரு வகையிலான மனச்சிக்கல் இருந்ததாகத் தரவுகள் சொல்கின்றன. அது தற்போது அதிகரித்திருக்கிறது. 2020 லாக்டவுன் காலக்கட்டம் ஏற்படுத்திய மன அழுத்தத்தால் அந்த வருடம் மார்ச் தொடங்கி மே மாதம் முடிய மட்டும் 300 தற்கொலைகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையை அடுத்து மத்திய அரசே முன்வந்து 24 மணிநேரமும் இயங்கக்கூடிய ’கிரண் ’என்னும் மனநலச்சீர்திருத்தத்துக்காக இலவசமாக 13 மொழியில் இயங்கும் தொடர்பு எண்ணை அறிவித்தது.
கடந்த செப்டம்பர் தொடங்கி செயற்பாட்டில் இருக்கும் இந்த எண்ணுக்கு ஜனவரி 2021 வரையில் மட்டும் 13,550 புகார்கள் வந்துள்ளன. பேசியவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் 29 சதவிகிதம் பேர் பெண்கள். அழைத்தவர்களில் 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிதமானது முதல் மிகத்தீவிரமானது வரை மன அழுத்தம் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
கொரொனா பாதிப்புக் குறைந்தாலும் அதற்கடுத்துச் சிலகாலத்துக்கு அது தொடர்பான உளசிக்கல் பிரச்னைகள் தொடரும் என்கிறார் மனநல ஆலோசகர் விதிஷா,”மனநலன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 2:30 மணிவரை எங்களுக்கு அழைப்பு வருகிறது. ஒரு குடும்பத்தில் தன்னுடன் மருத்துவமனைக்கு வந்த பத்து பேருமே இறந்துவிட்டார்கள் என்று ஒரு நபர் எனக்கு அழைத்துப் பேசுகிறார். எங்களாலேயே அந்தச் சூழலைக் கையாளமுடியவில்லை. பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை எங்களுக்கு அழைக்கிறார்கள்.
அவர்களது அச்சம் புரிந்துகொள்ளக்கூடியது. இதனால் மனநல நிபுணர்கள் நாங்கள் தற்போது கொரோனா பற்றியும் படிக்கத் தொடங்கிவிட்டோம். மற்றொருபக்கம் கொரோனா காலத்தில்தான் வீட்டில் நிலவும் உறவுச்சிக்கல்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியிருக்கின்றன. வீட்டில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை, சிறுவர்கள் மீது வீட்டின் பெரியவர்களே திணிக்கும் பாலியல் துன்புறுத்தல் என ஒரு வைரஸ் இங்கே ஒட்டுமொத்த மக்களையும் சீர்குலைத்துள்ளது. மனச்சிக்கல்களுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை அளித்து வரும் எங்களுடைய மன அழுத்தத்துக்கு யாரிடம் போய் முறையிடுவது எனத் தெரியாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறோம். சிலர் இந்தச் சூழலைச் சமாளிக்க முடியாமல் இந்தத் தொழிலே வேண்டாம் என முற்றிலுமாக விலகிவிட்டார்கள். தடுப்பூசி கொண்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தினாலும் அது மனதளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இன்னும் நீண்டகாலம் தொடரும்” என்கிறார்.
விதிஷா சொல்வது போலக் கொரோனா பாதிப்புக்காவது தடுப்பூசிகள் தீர்விருக்கிறது. ஆனால் அது ஏற்படுத்தும் இதுபோன்ற மன ரீதியான பாதிப்புகளுக்கு எந்தவிதத் தடுப்பூசிகளும் இல்லை என்பதே நிதர்சனம்.
கொரோனாகால மனச்சிக்கல் பிரச்னைகளுக்குத் தொடர்புகொள்ள அரசின் உதவி எண்: 1800-599-0019