நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வாய்ப்பு யார் யாருக்கு?
கோவை மாநகராட்சியில் மூன்று முறை மேயர் பதவியை கைப்பற்றிய அதிமுக, இதுவரை அப்பதவியை கூட்டணிக்கு கொடுத்த வந்த திமுகவும் முதல் முறையாக நேரடியாக மோத உள்ளன.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 15 இலட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல 7 நகராட்சிகளில் உள்ள 198 வார்டுகளில் 2 இலட்சத்து 131 வாக்காளர்களும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 207 வாக்காளர்களும் உள்ளனர். இப்பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய 20 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 5 வார்டுகளுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் என 20 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த கால தேர்தல்கள்
1981 ஆம் ஆண்டில் 72 வார்டுகளுடன் கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டில் 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. கோவையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய என 5 மண்டலங்கள் உள்ளது. கோவை மாநகராட்சி மேயர் பதவிகளை அதிமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.
கோவை மாநகராட்சியில் 1996 ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2001 ஆம் ஆண்டில் அதிமுகவை சேர்ந்த தா.மலரவன் மேயரானார். 2006ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காலனி வெங்கடாசலம் மேயராக முதல் முறையாக மறைமுகமாக முறையில் மாமன்ற உறுப்பினர்களால் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டு நேரடி தேர்தல் அதிமுகவை சேர்ந்த செ.ம.வேலுசாமி மேயரானார். 2014 ஆம் ஆண்டில் வேலுசாமி பதவி பறிக்கப்பட்டதால், நடந்த நேரடி தேர்தல் மூலம் கணபதி ராஜ்குமார் மேயரானார்
கோவை மாநகராட்சி மேயர் பதவியை இதுவரை திமுக கூட்டணி கட்சிக்கே வழங்கியுள்ளது. முதல் முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், இரண்டாவது முறை காங்கிரஸ் கட்சிக்கும் வழங்கியது. ஆனால் அதிமுக நேரடியாக மூன்று முறை மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி தேர்தலில் திமுகவும், அதிமுகவும் முதல் முறையாக நேரடியாக மோத உள்ளன.
திமுக கூட்டணி நிலவரம்
கோவை மாநகராட்சி மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக போட்டியிடுகிறது. அதேசமயம் அப்பதவியை கைப்பற்ற திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் துணை மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கார்த்திக், திமுக மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், முன்னாள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மீனா லோகு, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மனைவி நிவேதா சேனாதிபதி ஆகியோரில் ஒருவருக்கு மேயர் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிலும் மீனா ஜெயக்குமாருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மேயர் பதவியை கேட்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கொடுக்கப்பட்டால் காங்கிரஸில் முன்னாள் மேயர் வெங்கடாசலத்தின் மகள் காயத்திரி ராஜ்முரளிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் கோவை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டுமென்பதில் திமுக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை பொருப்பாளராக உள்ள செந்தில்பாலாஜி வகுக்கும் வியூகங்களை அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. கோவை மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தற்போதைக்கு நோக்கமாக உள்ளது.
அதிமுக கூட்டணி நிலவரம்
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றுள்ளதால், மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்புடன் அதிமுக களமிறங்க உள்ளது. அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை பொறுப்பாளராக நியமித்துள்ளது. அதேசமயம் அதிமுக எதிர்கட்சியாக இருப்பதால், பெரும்பாலானோர் போட்டியிடவும், செலவு செய்யவும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சந்திரசேகரின் மனைவியும், கோவை மாநகர மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை இணைச் செயலாளருமான ஷர்மிளா சந்திரசேகர், சந்திரசேகரின் தம்பி மனைவி செளமியா அன்பு உள்ளிட்டோருக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிமுக பெரும்பான்மை இடங்களை வென்றால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆசி பெற்ற நபரே, மாநகராட்சி மேயராக வாய்ப்புள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாஜக மேயர் பதவியை கேட்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை வழங்கப்பட்டால் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் மைதிலி, முன்னாள் பாஜக மாமன்ற உறுப்பினர் வத்சலா ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக நேரடியாக மேயர் பதவியை கைப்பற்ற நினைப்பதால், பாஜகவிற்கு அப்பதவியை விட்டுத் தராது எனக் கூறப்படுகிறது. கோவை மாநகராட்சி தேர்தலில் பல அணிகள் போட்டியிட்டாலும், அதிமுக, திமுக இடையே தான் நேரடிப் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.