தமிழ்நாட்டில் முதல்முறையாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் : கோவை விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், வருகின்ற 13-ஆம் தேதி முதல் முறையாக சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்று பொது பட்ஜெட் உடன் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் பட்ஜெட்டில் கோவை விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “1. கிராம அளவில் கிராம விவசாய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இவர் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, அங்கக மற்றும் விதை சான்றளிப்பு துறை, பட்டு வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியவைகளை வழங்க வேண்டும். விவசாய அதிகாரி விவசாயிகளுக்கு நடவு முதல் விற்பனை வரையான அனைத்து சந்தேகங்களுக்கும் கிராமங்களில் இருந்து தீர்வு அளிப்பவராகவும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் களத்தில் ஒரு இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும்.
- விவசாய நிலங்களை பத்திர பதிவு செய்யும் போது மரங்களுக்கு வரிகள் விதிக்கப்படுகிறது. இதனால் பலர் மரங்களை வெட்டி விட்டு பத்திர பதிவு செய்கின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு விவசாய விளை நிலங்களில் வளரும் மரங்களை விவசாய பயிராக கருதி பத்திரப்பதிவு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறோம்.
- சந்தனம், தேக்கு போன்ற மரப்பயிர்கள் பயிரிட அவற்றை தேவையான போது, வெட்டி விற்க எளிய நடைமுறை கொண்ட சட்ட திருத்தம் தேவை. இதன் மூலம் பசுமை பரப்பு அதிகரிப்பதுடன் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் .
- உரம் பூச்சி மருந்து தரமானதாக கிடைக்க வட்டார அளவில் உரம் பூச்சி மருந்து கடை அரசு சார்பில் திறக்கப்பட வேண்டும். இங்கு அனைத்து விதமான விவசாய இடு பொருள், உரம், பூச்சி, மருந்து மற்றும் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
- விவசாய உற்பத்தி செலவுகள் மிகவும் உயர்ந்தது உள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வழங்கும் கடன் தொகை உச்சவரம்பு 6 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் தமிழக கிராம மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பெருமளவில் பயன் தந்து வருகிறது. அந்தந்தப் பகுதி சார்ந்த அனைத்து விவசாயிகளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் ஆக்குவதை கட்டாயமாக்க வேண்டும். கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் செயல்பாடுகள் நடைமுறை சிக்கல் இல்லாத அளவுக்கு சட்ட திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
- கிராம அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் ஊரிலேயே, அல்லது அருகில் உள்ள பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக தங்களது காய்கறிகள் விற்க விவசாயிகள் விற்பனையகம் திறக்க வேண்டுகிறோம்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தற்போது விவசாய விளைநிலங்களில் ஒரு சில பணிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து விவசாயப் பணிகளுக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாயிகள் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.
- பயிர் காப்பீடு இழப்பீடு தற்போது பிர்க்காஅளவில் இயற்கை சேதம் அடைந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலை மாற்றி கிராம அளவில் சேதமடைந்தாலே தனிநபர்களுக்கு விவசாய இழப்பீடு காப்பீட்டுத்தொகை தரப்பட வேண்டும் . இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுகிறோம்.
- சிறு குறு விவசாயிகள் உச்சவரம்பு 2 மற்றும் 5 ஏக்கரில் இருந்து 5 மற்றும்15 ஏக்கர் வரை உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வர ஆவன செய்ய வேண்டுகிறோம்.
- தண்ணீர் சேமிப்பு முன்னிட்டும் விவசாய விளை நிலங்களின் பரப்பு அதிகரிக்கவும் சொட்டுநீர் மானிய உச்சவரம்பை 5 ஹெக்டேரில் இருந்து 10 ஹெக்டராக அதிகப்படுத்த சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டுகிறோம்.
- தற்போது வரை பின்பற்றப்படும் சொட்டுநீர் உண்டான வழிகாட்டு நெறிமுறை களை மாற்றியமைக்க வேண்டுகிறோம். தற்போது நடைமுறையில் உள்ள நெறிமுறைகள் சொட்டுநீர் பாசனம் பெற போதுமான அளவில் தேவையான உபகரணங்கள் கிடைக்கப் படுவதில்லை. இதனால் சொட்டு நீர் சம்பந்தப்பட்ட மானியத்திட்டங்கள் மிகப்பெரும்பாலான விவசாயிகள் மத்தியில் சென்றடைவதில்லை. நமது இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சொட்டுநீர் உபகரணங்களும் மாணியங்களில் கிடைக்க வழிகாட்டு நெறிமுறைகள் விவசாயிகள் பயனடையும் வகையில் மாற்றியமைக்க வேண்டுகிறோம். இதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீர் மிகவும் மேம்படும். இது மிகவும் அடிப்படையான கோரிக்கையாகும்.
- ஒரு சில குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் விவசாய விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு விவசாயிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் பயன்பெற ஏதுவாகும்.
- விவசாய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு விவசாய விளை பொருட்களின் ஏற்றுமதிக்கு அரசு தனித்துறை ஒதுக்கி உதவ வேண்டும். மதிப்புக்கூட்டு விவசாய பொருள்கள் பற்றி விவசாயிகளுக்கு உதவ இந்த துறைஅமைக்கப்படவேண்டும்.இந்தத்துறை ஏற்றுமதியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும்.
- ஒவ்வொரு வருடமும் மற்ற துறைகளை போல் ஒன்றிய மாவட்ட மாநில அளவில் சிறந்த விவசாய தேர்ந்தெடுத்து பரிசளிப்பு விழா நடத்த வேண்டும் இது மற்ற விவசாயிகளுக்கு தூண்டுகோலாக அமையும்.
- தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் விவசாயக் குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- விவசாய மோட்டர்களுக்கான மும்முனை மின்சாரம் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
- ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றவும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து சுமார் பத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்லாயிரம் விவசாய ஏக்கர் பயனடையும் வகையில் கோதவாடி குளத்திற்கு நிலத்தடி நீர் செறிவூட்டும் தண்ணீர் விட வேண்டுகிறோம்.
- கோவை கௌசிகா நதி புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட சின்னவேடம்பட்டி ஏரி உட்பட கோவை வடக்கு கிழக்கு பகுதிகள் பயனடையும் வகையில் அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்டம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
- நீலகிரி , கூடலூர் பகுதியில் குத்தகை காலம் முடிந்த தேயிலை தோட்டங்கள் வனப்பகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். வனப்பகுதி மாற்றத்தின்போது மலைவாழ் மக்கள், தோட்ட தேயிலை தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள் பாதிக்காத வகையில் வரங்கள் மழைக் காடுகளாக மாற்ற வேண்டுகிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய பல கோரிக்கைகள் உள்ளன. மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. எனவே அரசு இது குறித்து ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.