Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கோவை மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்..!
கோவையின் கேரள மாநில எல்லைப் பகுதிகளான வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிபா வைரஸ்:
இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை, சுகாதார துறைக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. நேற்று இறந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரிசோதனை வெளியானது.
அதில் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினரை தனி வார்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கோவை எல்லையில் கண்காணிப்பு தீவிரம்:
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதிகளில் தமிழ்நாடு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள வாளையார் பகுதி இருந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதியான வாளையார் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர பரிசோனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சுகாதாரத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உள்ளதா? இல்லையா? என்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதே போல கோவையின் கேரள மாநில எல்லைப் பகுதிகளான வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சளி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மாநில எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. நிபா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை என்றாலும், தமிழ்நாடு - கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. நிபா வைரஸ் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளனர்.