(Source: ECI/ABP News/ABP Majha)
“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்
"அதிகமாக பேசியதே அண்ணாமலை தான். இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம். கூட்டணி இருந்திருந்தால் 30, 35 சீட் கிடைத்தது இருக்கும்"
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பான ஆலோசணைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தல் தொடர்பாக தெளிவான அறிக்கையினை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து இருக்கின்றார். 1980 ,1989, 1996, 2004, 2019 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு தோல்விகளை பெற்று இருந்தாலும், அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இயக்கம் அதிமுக.
கோவை மாவட்ட மக்கள் ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றனர். வாக்களித்த மக்களை எப்போதும் மதிக்க கூடிய கட்சி அதிமுக. எப்போதும் போல அதிமுக மக்கள் பணியாற்றும். கோவைக்கு அதிமுக போல திட்டங்களை தந்த கட்சி வேறு இலை. அதிமுக பல தேர்தல்களை சந்தித்த கட்சி. எடுத்தேன் கவிழ்த்தேன் என பேச முடியாது. 2019 ல் 19.39 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், இப்போது 20.46 சதவீதம் வாங்கி இருக்கிறோம். கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து இருக்கின்றது. தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்போம்.
கூட்டணி கலைய காரணம்
அண்ணாமலை குறித்து பேச கூடாது என இருந்தோம். அண்ணாமலை நிறைய பேசி இருக்கின்றார். அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசியதாக சொல்லி இருக்கிறார். அதிகமாக பேசியதே அண்ணாமலை தான். இவர் தலைவராக வந்த பின்பு தான் அண்ணா, அம்மா, எடப்பாடியாரை பற்றி பேசினார். கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை பற்றி தவறாக பேசினார். இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம். கூட்டணி இருந்திருந்தால் 30, 35 சீட் கிடைத்தது இருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தெளிவாக இருக்கும். கூட்டணியில் இருந்து வெளியே வந்தாலும் பிஜேபி பி டீம் என்று பிரச்சாரம் செய்தது திமுக. விலகி வந்தால் விலகி வந்ததுதான். திமுகவின் பொய் பிரச்சாரத்தால் சிறுபான்மை மக்கள் அதிமுகவை நம்பவில்லை.
அண்ணாமலை விமர்சிப்பதை விட்டு விடவேண்டும். 2014 ல் இதை விட கூடுதலாக வாக்குகளை சி.பி.ராதகிருஷ்ணன் வாங்கினார். அவரை விட குறைவான ஓட்டுதான் அண்ணாலை வாங்கி இருக்கின்றார். வருகின்ற 2026 ல் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அண்ணாமலை இப்படி பேசுவதை விட்டு விட்டு, கோவை மக்களுக்கு அளித்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனைமலையாறு நல்லாறு திட்டம், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட வாக்குகளை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு, மேகதாது அணை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அண்ணாமலை அடுத்த முறை வேறு தொகுதியில் போய் நிற்பார். அண்ணாமலை ஆரம்பத்தில் விமர்சனம் செய்ததால் தான் கூட்டணி போனது. அண்ணாமலை அவர் தலைவர் பதவியை பார்த்து கொள்ளட்டும். பாஜகவை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளோம். பாஜக பொய்யை சொல்லி தான் வாக்குகள் சேகரித்தது. அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும். இந்த தோல்வியாக் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். இந்த தோல்வி வெற்றிக்காக படுகட்டு தான்” எனத் தெரிவித்தார்.