திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது - வானதி சீனிவாசன்
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உண்மையென்றால், இந்த அரசு கேவலமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் திமுகவினர் பாதிபேர் கைது செய்ய வேண்டும்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் அதிகமாக வெயில் பதிவாகும் இடங்களில் ஈரோடு போன்ற இடங்களும் இருப்பது அபாயகரமானது. தமிழகம் தொழிற்சாலை வளர்ச்சிகளிலும், நகர்புறமயமக்குதல் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் முதன்மையான மாநிலம். வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவை சுற்றுபுற சூழலோடு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் வாழக்கூடிய இடங்களாக அது இருக்கும். மரம், நிலத்தடி நீர் உயர நிறைய அமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர், இவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும். புவி வெப்பமயமாதாலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு மட்டும் போதாது, பணம் சரியான முறையில் சென்று சேரும் வகையில் செயல்பட வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இருக்கும் பகுதிகளில் தண்ணீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமை. அடித்தட்டு மக்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சவுக்கு சங்கர் விவகாரம்
திமுக அரசு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, குடிநீர் பிரச்சனை ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. திமுக குடும்பத்திற்கு எதிராக டிவிட்டர், சமூக வலைதளங்களில் பேசுபவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டுகிறது. மக்கள் பிரச்சினையில் அரசு தீவிரமாக இல்லை. சவுக்கு சங்கர் எங்களை பண்ணாத விமர்சனம் இல்லை. நான் திமுகவிற்கு போக போகின்றேன் என்று கூட சொன்னார். இவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோபம் செய்கின்றது. இது ஐனநாயகத்திற்கு விரோதமானது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, போதை கலாச்சாரம் இருக்கின்றது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கஞ்சா கேஸ் என்னும் பழைய நடைமுறையை திமுக இன்னும் தூக்கி கொண்டு இருக்கின்றது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? இல்லையா? இதில் என்ன உண்மை என தெரியாது. ஆனால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, மாநில அரசின் மீது சந்தேகம் வந்துள்ளது. சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உண்மை என்றால், இந்த அரசு கேவலமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது என அர்த்தம். பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் திமுகவினர் பாதிபேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். பெண் காவலர்களை இழிவுபடுத்தி விட்டதாக பொங்குகின்ற அரசு, திமுகவினர் எவ்வளவு பெண்களை கேவலமாக பேசி இருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.
தென்னையை பாதுகாக்க வேண்டும்
பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்த பின்னரே, சவுக்கு சங்கர் மீது வேறு வழி இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டின் ஜனநாயக மாண்புகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். எங்கள் மீது மோசமான விமர்சனம் வைத்தவர்தான் சவுக்கு சங்கர், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கஞ்சா வழக்கு போடுவது என்பது தவறானது. கோவையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதில் வழங்கக்கூடிய பணம் போதுமானதாக இல்லை. கூடுதல் பணம் ஒதுக்க வேண்டும். 50 முதல் 60% வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். அடுத்த தேர்தலுக்குள் இந்த பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் கர்நாடக மகளிர் அணி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. தேசிய மகளிர் அணி சார்பில் டெல்லியில் இருந்து நானும் கொடுத்திருக்கிறேன். யார் தவறு செய்திருந்தாலும் யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். ரேவண்ணா விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது. முதல்வர் ஓய்வுக்கு சென்றாலும் தமிழக அரசு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு. தமிழகத்தில் அனைத்து விதமான பொருட்களும் விலை ஏறிவிட்டது டாஸ்மாக் கடையில் கூட விலை ஏறிவிட்டது” எனத் தெரிவித்தார்.