கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும் - வானதி சீனிவாசன்
திமுகவினர் பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க, ஆட்களை செட் பண்ணி பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள்: வானதி குற்றச்சாட்டு
![கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும் - வானதி சீனிவாசன் Vanathi Srinivasan accuses dmk of setting up people and spreading false news about BJP giving money TNN கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும் - வானதி சீனிவாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/19/ae2f1bc54b3a72d13bc330229f5818e91713499635595188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பாஜக மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர். நேர்மையான திறமையான ஆட்சியை பிரதமர் மோடி தந்துள்ளார். மக்கள் தரும் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாஜகவிற்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும்.
கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு, கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி. இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும்.கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சியமைக்கையில் பாஜகவின் 400 எம்.பி.க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.
திமுக திசை திருப்புகிறது
கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில் தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை அதிகாரிகள் பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள். பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை. வெளிப்படையாக திமுக அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினர் பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க, ஆட்களை செட் பண்ணி பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும்” எனத் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ஆகியவை உள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)