(Source: ECI/ABP News/ABP Majha)
சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு; திருப்பூரில் காலையில் நடந்த சோகம்
காலை எட்டு மணி அளவில் எதிர்பாராத விதமாக சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதில் பேருந்திற்காக காத்திருந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொழுமத்தில் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கொழுமத்தில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வந்துள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்திற்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து செல்வது வழக்கம். இதனிடையே அப்பகுதியில் நேற்று முழுவதும் தொடர் மழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை பலவீனம் அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில் ஏராளமனோர் பேருந்திற்காக காத்திருந்து சென்றுள்ளனர். இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து வந்த நிலையில், பெரும்பாலானோர் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பேருந்திற்காக காத்திருந்துள்ளனர்.
காலை சுமார் எட்டு மணி அளவில் எதிர்பாராத விதமாக சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதில் பேருந்திற்காக காத்திருந்த கொழுமத்தைச் சேர்ந்த முரளி ராஜா (35), மணிகண்டன் (28), கௌதம் (29) ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மூன்று பேருக்கும் தலை கை, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை மீட்ட காவல் துறையினர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 3 பேரும் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து குமரலிங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.