கூண்டில் சிக்கிய காயம்பட்ட புலி; சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவிப்பு
கண்காணிப்பு கேமராவில் காயம்பட்ட நிலையில் ஒரு புலி சுற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து காயம்பட்ட புலியை பிடித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பல்லுயிர்கள் வாழுவிடமாகவும், அதிக வனவிலங்குகளின் வசிப்பிடமாகவும் விளங்கி வருகிறது. இதனிடையே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிடிபட்ட புலி
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி வனச்சரகம் மஞ்சம்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் குற்றச் செயல்களை கண்காணிக்கும் வகையில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராவில் காயம்பட்ட நிலையில் ஒரு புலி சுற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு புலியை தேடி வந்தனர். மேலும் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் காயம்பட்ட புலியை பிடித்து சிகிச்சை அளிக்கும் வகையில் 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து 20 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு 15ம் தேதி காயம்பட்ட புலி கூண்டில் சிக்கியது. இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்ப வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் புலிக்கு மயக்க மருந்து செலுத்தி, கூண்டில் வைத்தே பின் வயிற்று பகுதியில் இறுக்கி இருந்த லைலான் கயிற்றை அகற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காயத்திற்கு மருந்துகள் வைக்கப்பட்டது. பல மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு புலியின் உடல் நலம் தேறியது தெரியவந்தது. பின்னர் அந்த புலி அதே வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கூண்டில் இருந்து வனத்துறையினர் புலியை விடுவித்த நிலையில், புலி வனப்பகுதியில் பாய்ந்தோடியது.
பிடிபட்ட பாம்பு
இதேபோல கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டிக்கு பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற அவர், அங்கு பூந்தொட்டிக்கு அடியில் விஷமற்ற மரமணு குறைபாடுடைய வெள்ளிக்கோல் வரையன் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஓநாய் பாம்பு என்றும் அழைக்கப்படுவது உண்டு. வழக்கமாக வெள்ளிக்கோள் வரையன் பாம்புகள் உடல் மீது கட்டுக் கட்டாக தழும்பு பட்டைகள் இருக்கும். ஆனால் நாகப்பாம்பில் மரபணு குறைபாடுடன் உள்ள பாம்பு வெள்ளை நாகம் போல மரபணு குறைபாடுடன் உள்ள வெள்ளிக்கோல் வரையான் பாம்புகளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல இருக்கும். இந்த பாம்பை பத்திரமாக பிடித்த சித்ரன் அதனை, வனப்பகுதியில் விடுவித்தார்.