Crime : 100 முறை ஜெயிலுக்கு சென்ற பலே திருடன் ; காவல் துறையினரை அதிர வைத்த வாக்குமூலம்
"14 வயதில் திருட்டை தொடங்கினேன். தற்போது எனக்கு 53 வயதாகிறது. 39 வருடங்களாக திருட்டை தொடர்ந்து வருகிறேன். இதுவரை 99 முறை சிறைக்கு சென்றுள்ளேன். இன்று 100 வது முறையாக சிறைக்கு செல்ல உள்ளேன்”
கோவை குனியமுத்தூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபீர் அகமது (வயது 42). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குனியமுத்ததூர் பகுதியில் இருந்து ஒப்பணகார வீதிக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது பிரகாசம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவரது அருகில் இருந்த ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை எடுத்து பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பேருந்தை நிறுத்தி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு பிரகாசம் பேருந்து நிறுத்தத்தில் சாதாரண உடையில் இருந்த காவல் துறையினர் அந்த நபரை துரத்தி மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரின் பெயர் ஆறுமுகம் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் அவரைப் பற்றி சொன்னது காவல் துறையினரை திகைத்திட வைத்தது. அவர் போலீசாரிடம் தெரிவித்ததாவது, ”நான் கோவை செல்வபுரம் அரசமரம் வீதியை சேர்ந்த ஆறுமுகம் என்கிற போண்டா ஆறுமுகம் (55). எனது தொழில் திருட்டு மட்டும் தான். வேறு எந்த வேலைக்கும் சென்றது இல்லை. நான் எனது முதல் திருட்டை 14 வயதில் தொடங்கினேன்.
அப்போது காவல் துறையினர் என்னை கைது செய்து கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன் பின்னர் வெளியே வந்த நான் திருட்டை தொழிலாக தொடங்கினேன். முதன் முதலில் போண்டா திருடியதால் என்னை போண்டா ஆறுமுகம் என அழைக்க தொடங்கினர். அது நன்றாக இருந்ததால் நானும் அந்த பெயரை வைத்து கொண்டேன். எனது பெரும்பாலான திருட்டு பேருந்துகளில் மட்டும் தான்.
பேருந்தில் வரும் பயணிகளிடம் திருடிவிட்டு சுலபமாக தப்பி விடலாம். இதனால் எனது முதல் தேர்வு பேருந்து தான். பேருந்தில் செல்லும் போது டிப்டாப்பாக செல்வேன். கூட்டமாக இருக்கும் போது பெண்கள், முதியவர்கள், ஆண்கள் ஆகியவர்களிடம் இருந்து எது கிடைத்தாலும் திருடிக் கொள்வேன். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் திருடுவேன். திருடி கிடைக்கும் பொருட்களை விற்று அந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்வேன். மது, கஞ்சா குடித்தும் உல்லாசமாகவும் இருந்து வந்தேன்.
14 வயதில் திருட்டை தொடங்கினேன். தற்போது எனக்கு 53 வயதாகிறது. 39 வருடங்களாக திருட்டை தொடர்ந்து வருகிறேன். நூற்றுக்கணக்கான திருட்டில் ஈடுபட்டுள்ளேன். காவல் துறையினரிடம் மாட்டாமல் தப்பிக்க பார்ப்பேன். ஆனால் எப்படியாது காவல் துறையினர் என்னை பிடித்து விடுவார்கள். இதுவரை 99 முறை சிறைக்கு சென்றுள்ளேன். இன்று 100 வது முறையாக சிறைக்கு செல்ல உள்ளேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்