கோவை நகரில் சுற்றித்திரிந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
மயக்க நிலையில் உள்ள யானையை கும்கி யானை உதவியுடன் பிடித்து ரேடியோ காலர் பொருத்தி, தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அந்த மக்னா யானையை பிடிக்க கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கடந்த 5 ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6 ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களை கடந்து, கிணத்துக்கடவு வழியாக மதுக்கரை பகுதியை நோக்கி யானை நடந்து வந்தது. மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதையடுத்து சுமார் 140 கி.மீ. தூரத்திற்கும் மேலாக நடந்து பல்வேறு கிராமங்களை கடந்து கோவை மாநகரப் பகுதியை மக்னா யானை அடைந்தது. குனியமுத்தூர் அருகேயுள்ள செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றித் திரிந்தது. குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மாலை நேரத்தில் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானை பி.கே.புதூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. வீடுகள் நிறைந்த தெருக்களில் உலா வந்த யானை, அப்பகுதியில் இருந்த சுடுகாட்டின் மதில் சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மக்னா யானை செல்வபுரம் அருகேயுள்ள புட்டுவிக்கி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தெலுங்குபாளையம் பிரிவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. பின்னர் நொய்யல் ஆற்றுக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மக்னா யானை நின்று கொண்டிருந்தது. இந்த யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற வரவழைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் துவக்கினர். ஒரிரு முறை மருத்துவர்கள் செலுத்திய மயக்க ஊசி குறி தவறி சென்றது. முட்புதர் பகுதியில் சுற்றிய மக்னா யானை வாழைத்தோட்டத்திற்குள் சென்றது. அப்போது மருத்துவர் பிரகாஷ் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து மயக்க நிலையில் உள்ள யானையை கும்கி யானை உதவியுடன் பிடித்து ரேடியோ காலர் பொருத்தி, தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்