மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயில் எழுதிவைத்த குடும்பம் – ’கட்சி பாதுகாக்கும்’ என உருக்கம்..!
40 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் வங்கி வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துளசிதாஸ் – மலர்கொடி தம்பதியினர் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.
அரசியல் கட்சிகளில் பலர் பதவிக்காகவும், பணத்திற்காகவும் இணைந்து வரும் சூழலில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத கொள்கை பிடிப்பு கொண்ட தொண்டர்களால் தான் அக்கட்சிகள் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக தாங்கள் நேசித்த கட்சிக்காக ஒரு தம்பதியினர் மொத்த சொத்துகளையும் உயில் எழுதி வைத்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் துளசிதாஸ், மலர்க்கொடி தம்பதியினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் துவக்க கால தலைவர்களில் ஒருவராக துளசிதாஸ் இருந்துள்ளார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றி உள்ளார். மேலும் தூத்துக்குடி ஹர்பர் சங்கத்தை சிஐடியு சங்கத்துடன் இனைத்ததில் துளசிதாஸ் பெரும் பங்காற்றி உள்ளார். மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.
துளசிதாஸ் - மலர்கொடி தம்பதியருக்கு இரண்டு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மகன்கள் மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். துளசிதாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்ததோடு, அக்கட்சியினர் உடன் தோழமையுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களது 40 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் வங்கி வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துளசிதாஸ் – மலர்கொடி தம்பதியினர் உயிலாக எழுதி வைத்துள்ளனர். இதனை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் துளசிதாஸ், மலர்க்கொடி தம்பதியினர் வழங்கினர்.
இது குறித்து துளசிதாஸ் - மலர்கொடி தம்பதியினர் கூறுகையில், ”எங்களுக்கு இரண்டு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மகன்கள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். எங்களுக்கும் வயது மூப்பு அடைந்துவிட்டது. எங்களது கடைசி நாட்களில் எங்களை பாதுகாக்க உறவுகள் என்பதை தாண்டி நான் நேசித்த மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும் என்பதால் எங்களது சொத்துக்கள் முழுவதையும் மனமுவந்து எங்களது விருப்பத்தின் பேரில் கட்சியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளோம்.” என்றனர்.
உயிலை பெற்றுக்கொண்ட சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ”மனித குல விடுதலைக்கான உன்னத தத்துவத்தை முன்வைத்து இயங்குகிற மார்க்சிஸ்ட் கட்சியை பாதுகாக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்களைப் போன்றே லட்சக்கணக்கான ஊழியர்கள் இக்கட்சியின் மூச்சாக உள்ளனர். அதே நேரத்தில் உங்களையும், உங்கள் மகன்களையும் மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும்” என உறுதியளித்தார்.
தான் நேசிக்கும் கட்சிக்காக மொத்த சொத்துக்களையும் தம்பதியினர் உயில் எழுதி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.