Watch Video: கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு..!
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அவரது காரில் இருந்து புகை வெளியேறியது. இதனால் காரில் இருந்த நஞ்சப்பன் மற்றும் அவருடன் வந்தவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியேறினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரவாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் புகார் மனுக்களை அளிக்க வந்தனர். இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீக்குளிப்பு முயற்சி உள்ளிட்ட அசாம்பாவதங்களை தவிர்க்க பொது மக்கள் தீவிர சோதனைக்கு பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (75). முன்னாள் அரசு ஊழியரான இவர், கோவை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் உள்ள கருவூலத்தில் ஓய்வூதியம் தொடர்பாக விசாரிக்க வந்து விட்டு மீண்டும் வெளியே வந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அவரது காரில் இருந்து புகை வெளியேறியது. இதனால் காரில் இருந்த நஞ்சப்பன் மற்றும் அவருடன் வந்தவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வெளியேறினர். காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் தீயணைப்புக் கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.@abpnadu pic.twitter.com/yOpes4kcI6
— Prasanth V (@PrasanthV_93) December 6, 2021
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில்சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் அதற்குள் காரின் பெரும்பகுதி முழுமையாக எரிந்து நாசமானது.
காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல் துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்