புதிய கல்விக்கொள்கையை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் - ஆளுநர் தமிழிசை பேட்டி
“புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் உள்ளது. எல்லா மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாக உள்ளதாகும். புதிய கல்விக் கொள்கையால் உலக அரங்கில் முன்னேற முடியும்."
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்டு கொண்டிருக்கும் 25 சமூகப் பணியாளர்களுக்கு அவர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தராஜன் மாணவர்கள் முன்னிலையில் பேசியதாவது: ”இன்றைய காலகட்டத்தில் சமூக சேவை செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதற்கு வாழ்த்துகள். கல்லூரி நடத்துவதில் அனைத்து சவால்களையும் சந்தித்து 25வது ஆண்டு விழா கொண்டாடுவது சாதாரணம் அல்ல. இக்கல்லூரியில் படித்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் 25 வருட அனுபவம் பெற்றிருப்பார்.
நான் மருத்துவர்கள் மாநாடு, விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் மாநாடுகளில் பேசும் போது தயக்கம் ஏற்பட்டதில்லை. ஆனால் மாணவர்கள் முன் பேசுவதற்கு தயக்கம் உள்ளது. இன்றைய காலகட்டத்து மாணவர்கள் அறிவாளிகளாக உள்ளனர். அறிவாற்றலில் சிறந்து விளங்குகின்றனர். கல்லூரியில் படிக்கும்போதே ஒழுக்கத்தை திட்டமிட்டு வாழும் பழக்கத்தை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் பரிட்சைக்கு படிக்க வேண்டாம் என அறிவுரை சொல்ல பலர் வருவார்கள். பாதிக்கப்படுபவர்கள் நாமாக தான் இருப்போம். எனவே வாழ்க்கையில் ஒழுங்கு முறையை கொண்டு வர வேண்டும். திட்டமிட்டு வாழ்தலில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
1990களில் வினாத்தாள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறவும் என்று இருந்தது; 2000இல் 2 வினாவை விட்டுவிடலாம், 2015இல் உங்களுக்கு எது தெரியுமோ அதற்கு பதில் எழுதுங்கள், 2022 ல் நீங்கள் பரிட்சைக்கு வந்து அமர்திருப்பதற்கு மிக்க நன்றி என வினாத்தாள் கொடுக்க வேண்டிய கல்வி செல்லும் நிலை உள்ளது. தன்னம்பிக்கை என்ற நூல் என் கையில் இருந்தால் வெற்றி மாலை தானாக கழுத்தில் ஒட்டிக்கொள்ளும் என மூ.மேதா சொன்னார். வாழ்க்கையை இப்படிதான் வாழ வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது; நேரத்தை மீண்டும் பெற முடியாது.
வாழ்க்கையை சீராக அமைக்க வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள் அதுதான் உரிமை என மேம்போக்குவாதிகள், முற்போக்குவாதிகள் சொல்லி கொண்டு வருகின்றனர். அப்படி இல்லை, அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இரு கரைகளுக்கு நடுவே ஓடுவதுதான் நதி, அந்த நதி பயிர்களை விளைவிப்பதற்கும், மக்கள் குழிப்பதற்கும், நாட்டை செழிப்பதற்கும் பயன்படும்; கரைகள் இல்லாமல் ஓடினால் அது காற்றாறு வெள்ளம், அதனால் தண்ணீர் பலனில்லாமல் எங்கேயோ கலக்கக்கூடும். அதனால், வாழ்க்கையை நெறிமுறைகளை கடைபிடித்து, வெற்றி என்பது மட்டுமே ஒற்றை நோக்கமாக இருக்க வேண்டும்; எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம் என்பதில்லை” இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்கள் உள்ளது. எல்லா மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாக உள்ளதாகும். புதிய கல்விக் கொள்கையால் உலக அரங்கில் முன்னேற முடியும். தாய்மொழிக் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆகியவை புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. கொள்கை மாறுபாடு என்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதை விட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.