'ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ - தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
"தெலுங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் சட்ட மன்றம் தொடங்கியிருக்கிறது. அதனை பெரிது படுத்தவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்"
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கொரோனா இல்லாத நாடாக இன்று இந்திய உள்ளது. அதற்கு காரணம் 180 கோடி தடுப்பூசி போட்டதால் தான். இதற்கு மத்திய மற்றும் ,மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கிய காரணம். இருப்பினும் இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் முகக்கவசம் கட்டாய அணிய வேண்டும்.
தெலுங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் சட்ட மன்றம் தொடங்கியிருக்கிறது. அதனை பெரிதுபடுத்தவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் நான் அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது கருத்து. சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வது கூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிறு சிறு விஷயங்களுக்கு கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னை பொருத்த வரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பது தான் எனது கருத்து. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”அது குறித்து எவ்வித கருத்தும் சொல்ல முடியாது. நான் ஒரு சாதாரண குடிமகள் தான்” என அவர் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை துவங்க இருக்கிறதுபல்வேறு கட்ட . முயற்சிக்கு பின் இந்த சேவை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு நான் பிரதமருக்கும், விமானத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி வளர்ச்சிக்கு விமானச் சேவை முக்கியம். புதுச்சேரி சுற்றுலாத் துறை வளர்ச்சியடைவதற்கும், புதுச்சேரி ஒட்டியுள்ள கடலூர், நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும். இந்த விமான சேவை புதுச்சேரி - பெங்களூர், பெங்களூர் - ஹைதராபாத் நகருக்கும் இருக்கும். நான் அதில் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் ஒரே சமயத்தில் கோவை விமான நிலையம் வந்தனர். இதனையொட்டி திருமாவளவனை வரவேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும், தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்க பாஜகவினரும் கூடியிருந்தனர். அப்போது தொல் திருமாவளவன் வந்த போது ‘எழுச்சி செம்மல்’ என்ற கோஷங்களை எழுப்பினர். பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெய்பீம் என்ற முழக்கங்களை எழுப்பினர். இரு கட்சியினரும் மாறி மாறி அவர்களது முழக்கங்களை எழுப்பிக் கொண்டால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.