‘தமிழக மக்கள் எங்களை பாராளுமன்ற உறுப்பினராக்காததால் மத்திய அரசு ஆளுநராக்கியுள்ளது’ - தமிழிசை செளந்திரராஜன் பேட்டி
”தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொண்டு, எங்களை போன்றோரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருந்தால் எங்களை மந்திரி ஆக்கி இருப்பார்கள். எனவே திறமையாளர்களை வீணடிக்க வேண்டாம் என ஆளுநர் ஆக்குகிறார்கள்”
கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாளர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் தமிழிசை சௌந்திரராஜன் பேசும் போது, ”பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம். எனது மகனும், மருமகளும் இந்த கல்லூரியில் வேலை செய்து வருகிறார்கள். முதன் முதலில் தேசிய கீதம் பாடிய முதல் குழுமம், இந்த பி எஸ் ஜி குழுமம். தொழில்கல்வியை தமிழகத்தில் கொண்டுவர தமிழை தூக்கிப் பிடிக்க நினைத்தவர்கள் கூட, தொழில்கல்வியில் தமிழை புகுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் தமிழில் தொழில் கல்லூரிக்கு முன் நிலை கொடுத்தது. நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையில் அன்பு இருக்க வேண்டும்.
10 வருடமாக ஒரே சமையல்காரரை எப்படி வைத்துள்ளீர்கள் என்று என்னிடம் ஒருவர் கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன் எனக்கு தோசை பிடிக்கும். எனது சமையல்காரர் அம்மாவிற்கு இட்லி செய்ய தான் பிடிக்கும். இதற்கு நான் தோசை சுடும் ஆளை தேடுவதை விட, இட்லி பிடிக்க பழகிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும். ஆகவே தோசை எதிர்பார்ப்பதை விட இட்லி சாப்பிட்டு பழகி விட்டேன். எங்க டிரைவருக்கு ஸ்லோவாக தான் ஓட்ட தெரியும். ஆனால் எனக்கு வேகமாக போக பிடிக்கும். ஆனால் வேகமாக போனால் அபாயமாக இருக்கும். அதனால் ஸ்லோவாக போக பழகிக்குவோம் என இந்த டிரைவரை வைத்துக்கொண்டோம்.
நோயாளிகள் முதலில் சந்தேகம் கேட்டால் நாம் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கூகுளில் அப்படி சொல்லவில்லை என்கிறார்கள் என என் கணவர் தெரிவிக்கிறார். கூகுள் உடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. இன்றைய மாணவர்கள் நம்மை விட புத்திசாலியாக உள்ளார்கள். நான் ஆடியன்ஸ் தெரிந்து பேசுவது வழக்கம். நான் ஒரு பள்ளியில் பேசும் பொழுது மாணவரிடம் நான் ஸ்டேட் போர்டா, சென்டர் போர்டா என கேட்டேன், ஆனால் அந்த மாணவர் பிளேக் போர்ட். நான் ஆசிரியர்களை வணக்கத்திற்குரியவர்களாக நினைக்கிறேன். எங்கள் வீட்டில் தனிப்பட்ட கவனம் செலுத்தியது கிடையாது.
என் அப்பா அரசியல்வாதி. டெக்னாலஜியை சரியாக பயன்படுத்துங்கள். பிரச்சினையை தெரிந்து சரி செய்ய வேண்டும். சரியாக பணியாற்ற மனமும், உடலும் ஒத்துழைக்க வேண்டும். ஆகவே யோகா செய்ய வேண்டும். யோகா செய்தால் அதிக பணி செய்ய முடியும். என்னை பொறுத்தவரை 48 மணி நேரம் பணி செய்வேன். நான் இரண்டு செல்போன் பயன்படுத்துவது குறித்து ஒருவர் கேட்டார். அதற்கு நான் சொன்னேன். நான் இரண்டு மாநிலத்தை சமாளிக்கிறேன் இரண்டு செல்போனை சமாளிக்க முடியாதா என்றேன். விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தியாக மாட்டோம். விழுந்தால் தான் செய்தி. வாழ்கை வாழ்வதற்கு தான். திட்டமிட்டு வாழ்வோம். நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். நான் இருக்கும் மாநிலத்தில் கூட இது போல பணியாளர்களை கொண்டாட யோசனை சொல்வேன்” எனத் தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சிக்கு பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ”மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா உன்னத நோக்கம். பணியாளர்கள் தினம் கொண்டாடும் நிறுவனங்கள் குறைவு. பி.எஸ்.ஜி நிறுவனம் பல விதத்தில் முன்னோடியாக உள்ளது. பணியாளர் தினம் எல்லா நிறுவனங்களும் முன்னெடுத்துச் செல்லலாம் என்பது எனது யோசனை.
ஆளுநர்கள் பிரதமரால், உள்துறை அமைச்சரால் பரிசீலிக்கப்பட்ட பின், அதன் மூலம் ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொண்டு, எங்களை போன்றோரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருந்தால் எங்களை மந்திரி ஆக்கி இருப்பார்கள். எனவே திறமையாளர்களை வீணடிக்க வேண்டாம் என ஆளுநர் ஆக்குகிறார்கள். ஆக எங்கள் மீது தப்பு இல்லை.
தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். பேஸ்புக்கில் ஆயிரம் ஓட்டு வாங்க முடியாதா 1000, 2000 ஓட்டு வாங்க முடியாதா? என எழுதுவீர்கள். அது யார் தவறு. மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருவதற்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த சிந்தனை வந்தால் அதைப் பற்றி பேசுவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அண்ணாமலை இடம் கேட்கலாம் நான் ஆளுநர்” எனத் தெரிவித்தார்.