குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!
மலைக் கிராமங்களில் பயின்று வந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வந்தது. இந்த பள்ளிகளில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை உடன் 2 ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பின்னர் முறைசார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்வி தொடர ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 213 சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில பேரூரதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் குழந்தைத் தொழிலாளர்கள் சிறப்புப் பள்ளிகளை மத்திய அரசு மூடியுள்ளது. இப்பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலைக் கிராமங்களில் பயின்று வந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மலைக் கிராம மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக சுடர் தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகிறது. போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமங்கள் மற்றும் வனக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் கல்விக்காக இவ்வமைப்பு இயங்கி வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை அவ்வமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் சிறப்புப் பள்ளிகள் மூடல் காரணமாக போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராம மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் இருப்பதால், இடை நிற்றல்கள் அதிகரித்துள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் விளாங்கோம்பை, அக்னிபாவி, நாய்க்கன்தொட்டி, தொட்ட கோம்பை ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுடர் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் நடராஜ் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் 2007 ம் ஆண்டிற்கு முன்பு ஒருவர் கூட பள்ளிகளுக்கு சென்றதில்லை. குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து வந்தனர். அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்த போது, போக்குவரத்து வசதியில்லாததால் பள்ளிகளுக்கு சென்று வர முடியாது என்றனர். பின்னர் ஒரு மினி வாகனம் ஏற்பாடு செய்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல உதவினோம்.
2010 ம் ஆண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4 தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மீண்டும் கல்வி தடைப் பட்டது. பின்னர் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி அப்பகுதியில் துவங்கப்பட்டதால், மாணவர்கள் மீண்டும் கல்வி பயின்று வந்தனர். இதேபோல 30 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்தப்பட்டு வந்தன. 2 ஆண்டுகள் மட்டுமே அந்த சிறப்புப் பள்ளியில் பயில முடியும் என்றாலும், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து அப்பள்ளியிலேயே மாணவர்கள் பயின்று வந்தனர். அப்பள்ளிகளில் மீட்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி பயின்றுள்ளனர். அங்கு பயின்ற 100க்கும் மேற்பட்டோர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 3 பேர் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றனர். ஒருவர் வேளாண் கல்லூரியில் பயின்று வருகிறார்.
ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கான நிதியை குறைத்துக் கொண்டே வந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை முழுவதும் கைவிட்டுள்ளது. இதனால் நகரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பெரியளவு பாதிப்பு இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு எளிதாக சென்று பயில முடியும். ஆனால் மலைக்கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் சுமார் 250 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விளாங்கோம்பை சிறப்புப் பள்ளியில் படித்த மாணவர்கள், 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வினோபா நகர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து வசதியில்லாததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. கொரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 3 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு இந்த பள்ளிகளை மூடியது தவறான முடிவு. ஒன்றிய அரசிடம் இத்திட்டத்தை தொடர தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அல்லது இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். விளாங்கோம்பை, அக்னிபாவி, நாய்க்கன்தொட்டி, தொட்ட கோம்பை ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளிகள் துவங்க வேண்டும். அதுவரை மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இக்கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார். மலைக்கிராம மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.