S.P. Velumani: 'அதிமுக முன்னாள் அமைச்சர்களை புதிய வழக்குகளில் கைது செய்ய திட்டம்’ - எஸ்.பி.வேலுமணி
ஆட்சியின் மீது மிகப்பெரிய கெட்ட பெயர் உள்ளது. அதை திசை திருப்ப என் மீதும், தங்கமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் புதிய வழக்கு போட திட்டமிடப்பட்டுள்ளனர்.
![S.P. Velumani: 'அதிமுக முன்னாள் அமைச்சர்களை புதிய வழக்குகளில் கைது செய்ய திட்டம்’ - எஸ்.பி.வேலுமணி S.P. Velumani said that they are planning to arrest former admk ministers in new cases TNN S.P. Velumani: 'அதிமுக முன்னாள் அமைச்சர்களை புதிய வழக்குகளில் கைது செய்ய திட்டம்’ - எஸ்.பி.வேலுமணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/e546243f3081e5324f6f7eb74906456e1687334927996188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரியும், திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எஸ்.பி. வேலுமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்து தற்போது இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டம், சாலை பணிகள், மேம்பால பணிகள் எல்லாம் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்த கோரியும், கோவை மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கேரளாவில் அணை கட்டி வரும் கேரள அரசை தடுக்காமல் உள்ள திமுக அரசை கண்டித்தும், கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார். இந்த ஆட்சி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் தான் உள்ளார்கள். அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில் தான் அனைவரும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான். ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தேன். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதெல்லாம் பொறுக்க முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக மூன்று முறை எனது வீட்டில் சோதனையை நடத்தி தொந்தரவு செய்தார்கள். பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள். டேவிட்சன் தேவாசீர்வாதம், உதயசந்திரன் தான் இந்த ஆட்சியை நடத்துகிறார்கள். ஆட்சியின் மீது மிகப்பெரிய கெட்ட பெயர் உள்ளது. அதை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள். முதலமைச்சர் நாட்டில் என்ன நடக்கிறது என கவனிப்பதில்லை. அனைத்து துறைகளிலும் கடுமையான ஊழல் நடக்கிறது. கோடநாடு பிரச்சினையை வெளியில் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததே எடப்பாடியார் தான்.
என் மீதும், தங்கமணி, விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதும் புதிய வழக்கு போட திட்டமிடப்பட்டுள்ளனர். என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது மருத்துவர்களுக்கு தான் தெரியும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது இன்று காலை அறுவை சிகிச்சை என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள். இதில் என்ன நடக்கும் என்று நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். நன்றாக இருக்கக்கூடிய ஒரு மனிதரை இவ்வாறு செய்கிறார்களே என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)