கோவையில் பேருந்தில் 80 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் ; ஹவாலா பணமா..?
உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 80 லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 80 இலட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி பயணித்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த கைப்பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். இதனைக் கவனித்த பேருந்து நடத்துனர் கைப்பை வைத்திருந்த குமாரை டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் நடத்துனருக்கும், குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நடத்துனர் பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்தார். இதையடுத்து காட்டூர் காவல் துறையினர் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த பையினை காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த கைப்பையில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பணத்தை எண்ணி பார்த்த போது 80 லட்ச ரூபாய் பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து குமாரிடம் காவல் துறையினர் கேட்ட போது, பைனான்ஸ்காக வைத்திருந்த பணம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 80 இலட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் அளித்தனர். இதன் பேரில் காவல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரையும், பணத்தையும் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து குமாரிடம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 80 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்