பழங்குடியினரிடம் லஞ்சம் வாங்கிய ஏட்டு பணியிட மாற்றம் - கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய போலிசிடம் விசாரணை
விசாரணையில் மாங்கரை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் முத்துசாமி என்பவர் பாயை பறித்தது தெரியவந்தது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் ஆனைகட்டி பகுதி உள்ளது. ஆனைக்கட்டி செல்லும் சாலையில் மாங்கரை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், கேரளாவில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சோதனை சாவடியில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகளில் துடியலூர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆனைகட்டியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் வாழை நாரிலிருந்து யோகாசன பாய் தயாரித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட வாழை நார் யோகாசனப் பாயின் ஓரப் பகுதியை தைக்க சின்னத் தடாகம் பகுதியை சேர்ந்த டைலர் ஐயப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஐயப்பன் யோகாசனப் பாயை தைத்துக் கொண்டு, ஆனைகட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். அப்போது சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்கள் ஐயப்பனை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது யோகாசன பாய்களுக்கு பில் இல்லை என்பதால் 1500 ரூபாய் மதிப்பிலான ஒரு யோகாசன பாயை கொடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். ஒரு பாய் என்பது பழங்குடியின பெண்களின் ஒரு வார கால உழைப்பு எனக்கூறி ஐயப்பன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஒரு பாயை இலஞ்சமாக பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆதிவாசி பெண்கள் வாழ்வாதாரமாக மைய நிர்வாகி சௌந்தர்ராஜன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை நடத்தினார். விசாரணையில் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் முத்துசாமி என்பவர் பாயை பறித்தது தெரியவந்தது.
மேலும் அங்கு பணியில் இருந்த நான்காவது பட்டாலியனை சேர்ந்த சிறப்பு காவல்படை காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து பாயை பறித்த ஏட்டு முத்துசாமி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சோதனைச்சாவடி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இருவரும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக நான்காவது பட்டாலியன் சிறப்பு காவல் படையில் மாவட்ட காவல் துறையினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்