Crime : கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை - 3 பேர் கைது
சோதனை செய்த போது விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4 சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.
கோவை அருகே கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனை அடுத்து அவர்களை சோதனை செய்த போது விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4 சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மூன்று பேரையும் காவல் துறையினர் பெரியநாய்க்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன், பிரவீன் குமார், நவீன் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் யாரேனும் தங்களது பகுதியில் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்துபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். போதையில் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டு நல்வழிப்படுத்த காவல் துறை தொடர்ந்து பணியாற்றும். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருட்கள் விற்பனை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்