கோவை : க்வாரண்டைன் மருத்துவ ஆலோசனை தேவையா? வீடியோ கால் சேவையை அறிவித்த மாநகராட்சி
CBE CORP VMed என்ற ஆண்ட்ராய்டு செயலியை http://qrgo.page.link/sby6R என்ற இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து, தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து உபயோகிக்கலாம்
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற கோவை மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல தொற்று பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் தொடர்ந்து அதிக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 7 நாட்களில் கோவை மாவட்டத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 61.64 சதவீத பாதிப்புகள் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் ஏற்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்ட உதவிகள் பெற மூன்று கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதேபோல 94 சதவீதத்திற்கும் மேல் ஆக்சிஜன் அளவு உள்ளவர்களுக்கும், இணை நோய் இல்லாதவர்களுக்கும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் லேசான தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து CBE CORP VMed என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் செயல்பாட்டை கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்த்தில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இது குறித்து மாநகர சுகாதார அலுவலர் ராஜா கூறுகையில், ”லேசான தொற்று பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது பரவல் அதிகரிக்க வாய்புள்ளது. வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோ கால் மூலம் பெற்று கொள்ளலாம். மருந்து பரிந்துரை சீட்டையும் இந்த செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை மருந்தகங்களில் காண்பித்து மாத்திரைகள் பெற்று கொள்ளலாம். சுழற்சி முறையில் 24 மணிநேரமும் ஆறு மருத்துவர்கள் இதற்காக பணியமர்த்தபட்டு உள்ளனர்.
மக்களிடம் இருந்து அழைப்புகள் அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் சிரமமின்றி மருத்துவ ஆலோசணை பெற்றுக்கொள்ளலாம். CBE CORP VMed என்ற ஆண்ட்ராய்டு செயலியை http://qrgo.page.link/sby6R என்ற இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து, தொலைபேசி எண்ணை பதிவு செய்து உபயோகிக்கலாம்” என அவர் தெரிவித்தார்.