வெள்ளியங்கிரி மலையேறி, பக்தர் உயிரிழப்பு ; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு
வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே மலையேற அனுமதிகப்பட்டு வருகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு மலையேற அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் மலையில் தற்கால மருத்துவ முகாம்கள் அமைத்தனர். அங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, தொடர்ந்து மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன.
அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழப்பு
இதனிடையே கடந்த வாரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏறிய ஹதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68) நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.
இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார். இதேபோல தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) என்பவர் இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்து இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த ரகுராமன் (60) வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். அப்போது ஐந்தாவது மலையில் சீதை வனம் அருகில் சென்ற போது, அவருக்கு உடல் நிலை மோசமாகியுள்ளது. இது குறித்து உடனிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் வனத்துறையினர் பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைத்து சென்று பார்த்தபோது, ரகுராமன் உயிரிழந்தது இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
ஆண்டுதோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்துவரும் நிலையில் மூச்சுத்திணறல், இருதய பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உள்ளிட்ட உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மலையேறக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தாண்டில் மட்டும் இதுவரை வெள்ளியங்கிரி மலையேறிய 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.