கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை..!
ஏற்கனவே கூடுதல் விசாரணை துவங்கியபோதே, தனிப்படை காவல் துறையினர் சயனிடம் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று சயனிடம் விசாரணை நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் நாரயணசாமி, மகன் அசோக்குமார் ஆகியோரை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர்கள் சிபி, சுனில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கூடுதல் விசாரணை தொடங்கியபோதே, தனிப்படை காவல் துறையினர் சயானிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று சயானிடம் விசாரணை நடைபெற்றது. தற்போது புதிய நபர்களிடம் நடத்திய கூடுதல் விசாரணையின்போது கிடைத்த தகவல்களுக்கும், சயான் அளித்த தகவல்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை தெளிவுபடுத்தும் வகையில் மீண்டும் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.