உதகையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ; பொதுமக்கள் சாலை மறியல்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி தலைக்குந்தா சந்திப்பில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தலைக்குந்தா பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் 9 வயது மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைக்குந்தா பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் கூலித் தொழிலாளி தம்பதியின் 9 வயது மகளும் தனது தோழிகளுடன் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காந்திநகர் பகுதியை சேர்ந்த கேரட் மூட்டை தூக்கும் தொழிலாளியான அஜித் (வயது 23) என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து, சிறுமியை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அழைத்து சென்றார். பின்னர் அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
அப்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டதால், சிறுமியை அஜித் பலமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி மீண்டும் அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சென்ற போது, அஜித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் சிறுமியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊர் மக்கள் விரட்டி சென்று அஜித்தை பிடித்து தாக்கி புதுமந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அஜித், ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அஜித் மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி தலைக்குந்தா சந்திப்பில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஊட்டி - கூடலூர் சாலையில் இருபுறமும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சும்மா 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் கைதான அஜித் மீது ஏற்கனவே வேறோரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.